
தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் முறையாக தவெக சார்பில் அதிமுகவை அட்டாக் செய்யும் வகையில் பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, ‘திமுக பேசிப் பேசி வளர்ந்த கட்சி. ஆனால், இன்று அவர்களிடம் பேசுவதற்கு ஆளே இல்லை. கமிஷன், கட்டிங், ஷேர் என திமுக மாறிவிட்டது. தீய சக்தி திமுக, ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது என்பதை உணர்ந்து எம்.ஜி.ஆர் அதிமுகவை எப்படி தொடங்கினாரோ, அதே உணர்வில்தான் தலைவர் தவெகவை தொடங்கியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் இருக்கும்போது பெரியாரியம் மார்க்சியம் என எல்லாவற்றையும் பேசுவார்கள்.
ஆளுங்கட்சி ஆனவுடன் கொள்ளையை மட்டுமே கொள்கையாக கொண்ட அமைச்சர்களையும் ஒரு குடும்பத்தையும் உருவாக்குவார்கள். அதுதான் கலைஞரின் வெற்றி. கலைஞர் கூட பெரியாருடைய கொள்கையில் ஒத்துப்போவார். இன்றைய முதல்வருக்கு கொள்கையே கிடையாது. வெறும் ஊழல் மட்டும்தான். செந்தில் பாலாஜி என்ன பெரியாரிஸ்ட்டா? எ.வ.வேலு என்ன மார்க்சியவாதியா? திமுகவுடைய ஊழல்கள்தான் பாஜகவை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மோடியா லேடியா எனக் கேட்டார். ஆனால், இப்போது அதிமுக பாஜகவை பின்புறம் வழியாக அனுமதித்து கூட்டணி வைத்திருக்கிறது. அந்த கூட்டணிக்கு தலைமை யார் என்றே தெரியவில்லை. சி.எம் யாரென்றால் அதை அமித் ஷாதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள். அதிமுகவின் தலைமை வலுவிழந்துவிட்டது.
அதிமுக தொண்டர்கள் தவெகவில் எப்போதோ இணைந்துவிட்டார்கள். அதனால்தான் அதிமுகவை நாங்கள் எதிர்க்கவில்லை.
எம்.ஜி.ஆர் எந்தக் குறிக்கோளோடு அதிமுகவை தொடங்கினாரோ, ஜெயலலிதா எந்த குறிக்கோளோடு அதிமுகவை மீட்டெடுத்தாரோ அந்த குறிக்கோளின் இன்றைய நம்பிக்கை தலைவர் விஜய். அதிமுகவின் கொள்கையற்ற அரசியலால்தான் திமுக மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்றது.

இனிமேல் திமுகவால் வெல்ல முடியாது. ஏனெனில், உங்களை எதிர்த்து அரசியல் செய்வது பாஜகவிடம் சரணடைந்தவர்கள் அல்ல. பாஜகவை கொள்கை எதிரியாக கொண்டவர்கள். இஸ்லாமிய தோழர்களே குரான் மீது ஆணையாக சொல்கிறோம். நாங்கள் ஒரு போதும் பாஜகவோடு கூட்டணிக்கு செல்லமாட்டோம்.காமராஜர் அவர்கள் கலைஞரின் கையைப்பிடித்து ஜனநாயகத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்றாராம். இரண்டு பேருமே இன்று உயிரோடு இல்லை. திமுக பொய்யை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸில் திருச்சி வேலுசாமி மட்டும்தான் தன்மானத்தோடு திமுகவை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறார். காங்கிரஸை திமுக உயிரோடு விழுங்கிக் கொண்டிருக்கிறது. காமராஜரை தொட்டால் காங்கிரஸ் வருகிறதோ இல்லையோ தவெக வரும்.’ என்றார்.