
தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் பற்றியும் ஆர்.எஸ்.எஸ் யைப் பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
அருண் ராஜ் பேசியதாவது, ‘திமுகவினர் நம்முடைய கல்வியையும் இயற்கை வளங்களையும் அழிக்க வந்த அரசியல் திருடர்கள். தளபதி சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. சம்பாதித்து முடித்துவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். மதரீதியாக பிளவுப்படுத்தும் சக்திகள் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அச்சுறுத்தல். இதற்கான எடுத்துக்காட்டு மணிப்பூர்தான்.
மணிப்பூர் இன்னமும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. பெரியார் மண்ணான இந்த தமிழ்நாடு பாஜக – ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை வேரூன்ற விடாது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிக்கலான உடல்நல பிரச்சனைகளுக்கே டெல்லி எய்ம்ஸூக்குதான் சென்றார். திமுகவின் அமைச்சர்களைப் பாருங்கள். சின்ன தலைவலி என்றாலும் அவர்கள் எங்கு செல்கிறார்கள்?

உங்களுக்கே அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை இல்லையென்றால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இதுதான் உங்க சமூகநீதியா? சமீபத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு செய்தித்தொடர்பாளர்களாக நியமித்தது. குடிமைப் பணியாளர்களுக்கு இரண்டு விஷயம் ரொம்பவே முக்கியம். அவர்கள் நடுநிலைமையாக இருக்க வேண்டும் மற்றும் ஆட்சியாளர்களின் பின்னால் இருந்து செயல்பட வேண்டும். அரசின் முகமாக அவர்கள் இருக்கக்கூடாது. வெற்று விளம்பர மாடல் அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து விளம்பரம் தேடிக் கொள்கிறது. அந்த அதிகாரிகள் இதற்கு ஒத்துக் கொண்டிருக்கக்கூடாது.’ என்றார்