
பாலிவுட்டில் பணக்கார நடிகர்களில் நடிகர் அக்ஷய் குமாரும் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிடுவார். அவருக்கு ரூ.2,700 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. அனைத்து பாலிவுட் வாரிசுகளும் தங்களது பெற்றோரைப்போன்று திரைப்படத்துறையில் நுழைய வேண்டும் என்று நினைத்து அதற்கு தக்கபடி படித்து வருகின்றனர்.
நடிகர் ஷாருக்கானின் இரண்டு பிள்ளைகளும் சினிமாவிற்கு வந்துவிட்டனர். இதே போன்று அமிதாப்பச்சனின் மகள், பேரக்குழந்தைகளும் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் அக்ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணாவின் மகன் ஆரவ் பாடியா(22) மற்ற பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகளிடமிருந்து முற்றிலும் விலகி, மாறுபட்டு இருக்கிறார்.
படிப்புக்காக தனது 15 வயதில் பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஆரவ் இப்போது லண்டனில் பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சிங்கப்பூர் சென்று பட்டப்படிப்பை முடித்த ஆரவ் இப்போது லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். ஆரவ் பொது நிகழ்ச்சிகளில் தனது தந்தையோடு கலந்து கொள்வது மிகவும் அபூர்வம். அதோடு சமூக வலைத்தள பக்கத்திலும் அதிக ஈடுபாடு கிடையாது. பாலிவுட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தாலும் அந்த பக்கமே எட்டிப்பார்க்காமல் தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அக்ஷய் குமாரே ஒரு முறை தனது மகன் எளிமையான வாழ்க்கையையே விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தார். அதோடு அவருக்கு சினிமாவிலும் விருப்பம் கிடையாது என்று அக்ஷய் குமார் குறிப்பிட்டார்.
அக்ஷய் குமார் தனது மகன் குறித்து மேலும் கூறுகையில், ”எனது மகன் அன்றாட வேலைக்கு தொழிலாளர்களை நம்பி இருக்கமாட்டான். ஆரவ் தனக்கு வேண்டிய சாப்பாட்டை அவனே சமைத்துக்கொள்வான். தனது பாத்திரங்கள் கழுவிக்கொள்வான். அவன் அணியும் ஆடைகளைக்கூட அவனே சோப்பு போட்டுக்கொள்வான். தேவையற்ற செலவுகளை செய்யமாட்டான்”என்றார்.
அவருக்கு வேண்டிய உடைகளைக்கூட ஆடம்பரமான கடைகளில் வாங்காமல் சாதாரண கடைகளில் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் ஒரு முறை ஈத் விருந்தில் தனது உறவினர் ஒருவருடன் கலந்து கொண்டார்.
அப்போது அவரை பார்த்த அனைவரும் அவர் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் சாயலில் இருப்பதாக தெரிவித்தனர். நடிகர் ராஜேஷ் கண்ணா ஆரவ் பாட்டியாவின் தாத்தா ஆவார்.
தனது மகனின் எதிர்காலம் குறித்து அக்ஷய் குமாரும், அவரது மனைவியும் பல சந்தர்ப்பங்களில் தங்களது விளக்கத்தை தெரிவித்துள்ளனர்.
ஆரவிற்கு நடிப்பில் விருப்பம் இல்லை என்றும், பேஷன் டிசைனிங்கில் தனது எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டனர். அவருக்கு சினிமாவில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. சிறிய வயதில் இருந்தே எதையாவது புதிதாக உருவாக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டர் என்று அக்ஷய் குமாரும், அவரது மனைவியும் குறிப்பிட்டு இருந்தனர். பேஷன் டிசைனில் ஆர்வம் காட்டினாலும் விளையாட்டையும் ஆரவ் விட்டு வைக்கவில்லை.

கராத்தே விளையாட்டில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறார். அதோடு ஜூடோ விளையாட்டில் தேசிய அளவில் தங்கப்பதக்கமும் வாங்கி இருக்கிறார். விளையாட்டில் தேசிய அளவில் சாதித்து இருந்தாலும் அது தொடர்பான செய்திகள் மீடியாவில் வருவதை ஆரவ் பெரிதாக விரும்பவில்லை.
ஆரவ் பாட்டியாவின் வாழ்க்கை குறித்து தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் பலரும் அவரை வெகுவாக பாராட்டுகின்றனர். தாத்தா, பாட்டி, பெற்றோர் சினிமா நட்சத்திரங்களாக இருந்தபோதிலும், ஆரவ் அவர்கள் பாதையில் செல்லாமல் தனக்கென புதிய பாதையை தேர்ந்தெடுத்து இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…