
கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி கேரள மாநிலத்துக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் நாளை செயல்படாது. கேரளாவில் நாளை முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மூன்று நாட்களும் தேசியகொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது:
“கேரளத்தின் வரலாற்றிலும், புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றிலும் வி.எஸ்.அச்சுதானந்தனின் வாழ்க்கை ஓர் அத்தியாயமாகும். சமரசமற்ற போராட்ட நிலைபாட்டுடன், துடிப்பான போராட்டத்தின் சின்னமாக திகழ்ந்தவர். மக்களின் பிரச்னைகளை தானே ஏற்றெடுத்து, மக்களுடன் போராட்ட களத்தில் நின்றவர். அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகும். கட்சிக்கும், ஒட்டுமொத்த ஜனநாயக முற்போக்கு இயக்கத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவருடன் நீண்டகாலமாக ஒன்றாக பணியாற்றிய ஏராளமான நினைவுகள் என்னுள் தோன்றுகின்றன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து இயக்கத்துடன் வளர்த்ததுதான் வி.எஸ்.அச்சுதானந்தனின் அரசியல் வாழ்க்கை. முதலாளித்துவமும், சாதியமும் கொடிகட்டிப்பறந்த இருண்ட காலத்தை போராட்டங்கள் மூலம் சரியாக்கினார். 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். கம்யூனிஸ்ட் தலைவராகவும், எம்.எல்.ஏ என்ற நிலையிலும், எதிர்க்கட்சி தலைவராகவும், முதல்வராகவும் வி.எஸ்.அச்சுதானந்தனின் பங்களிப்பு அளப்பரியது.
1940-ல் தனது 17 வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 85 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருந்திருக்கிறார். 1948-ல் கட்சி தடை செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டார். 1952-ல் கட்சியின் ஆலப்புழா டிவிஷன் செயலாளர் ஆனார். 1957-ல் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் ஆட்சிக்கு வந்த சமயத்தில் ஆலப்புழா மாவட்ட செயலாளராக இருந்தார். 1959-ல் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக ஆனார். 1967 மற்றும் 1970 சட்டசபை தேர்தல்களில் அம்பலப்புழா தொகுதியிலும், 1991-ல் மாராரிகுளம் சட்டசபை தொகுதியிலும் வென்று எம்.எல்.ஏ ஆனார். 2001 முதல் 2021-வரை பாலக்காடு மாவட்டம், மலம்புழா தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆனார். 2006 முதல் 2011-வரை கேரள முதலமைச்சராக இருந்தார். வி.எஸ்.அச்சுதானந்தனின் மறைவு கட்சிக்கும், நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.”
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சி.பி.எம் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ஓய்வில்லாத போராட்டம்தான் வி.எஸ்.அச்சுதானந்தன். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக கருத்துமிக்க போராளியாக இருந்தார். கேரளாவில் எண்ணற்ற போராட்டங்களை அறிவித்து, அவற்றை முன்னின்று நடத்திய உறுதியான கம்யூனிஸ்ட் சகாவு வி.எஸ்.அச்சுதானந்தன். சமூகத்துக்கு உணர்வூட்டும் வகையில் இருந்தது வி.எஸ்.அச்சுதானந்தனின் பேச்சு. எந்த தடைகளையும் எதிர்கொள்ளும் ஊக்கம் அவருக்கு இருந்தது. வரும் தலைமுறைகள் பின் தொடரும் வகையில் வலுவான தடத்தை பதித்துச் சென்றுள்ளார் வி.எஸ்.அச்சுதானந்தன்” என குறிப்பிட்டுளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தோல்வியிலும் வெற்றிபெறுபவர். எப்போதும் எதிர்குரலாக ஒலிப்பவர். வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார். கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.