
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பட்டாசு என்றால் வான வேடிக்கைகள், சத்தம், மாசு என்கின்றவற்றையெல்லாம் தாண்டி வெடி விபத்து என்ற சோகக்கதையும் இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் சாலையில் மாரியம்மாள் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இதில் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு( பெசோ) உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது.
இந்நிலையில் மாலை பட்டாசு ஆலையில் மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு துறையினர், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிவகாசியை சேர்ந்த கார்த்திகேயன் (21), சங்கீதா (45) லட்சுமி (48) ஆகிய மூன்று தொழிலாளர்கள் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த மாரியம்மாள், (50), நாகலட்சுமி, (55) மாரியம்மாள் (47) ஆகிய மூன்று தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை போர் மேன் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.