• July 21, 2025
  • NewsEditor
  • 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை வெளியிட வலியுறுத்துவோம் எனக் கூறியிருந்தார்.

அதேபோல், இன்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக மாநிலங்களவை தி.மு.க எம்.பி-க்கள் குழு தலைவர் திருச்சி சிவா, கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இவ்வாறான சூழலில் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று கீழடி தொடர்பாக எழுத்துப்பூர்வமாகக் கேள்வியெழுப்பியிருந்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன்

அதில், “கீழடி ஆய்வறிக்கையை நிராகரித்தது ஏன்? ஆய்வு முடிவதற்குள் அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்தது ஏன்?” உள்ளிட்ட கேள்விகளை தமிழச்சி தங்கபாண்டியன் முன்வைத்திருந்தார்.

அதற்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

அந்த பதிலில், “அகழாய்வு பணிகள் பல ஆண்டுகள் நீடிக்கும். அப்போது, அந்த காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் அகழாய்வுக்குத் தலைமை தங்குவார்கள்.

அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகள், தொல்லியல் துறை நிபுணர்களால் பரிசீலனை செய்யப்பட்டு அதன் பின்னரே அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்.

கீழடி அறிக்கைகள் தற்போது மதிப்பாய்வில் இருக்கிறது. அவற்றின் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறவில்லை. அறிக்கை நிராகரிக்கப்படவில்லை.

கீழடி
கீழடி

கீழடியில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. தற்போது தமிழக தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சட்டப்படி, உரிய அறிவியல் செயல்முறையைப் பின்பற்றி வெளியிடப்படும்.

மேலும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்குப் பணிகளை ஒதுக்குவது சாதாரண நிர்வாக நடவடிக்கைதான்.

அவ்வாறு நிர்வாக காரணங்களால் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *