
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று மாலை 3.20 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் இன்று இரவு 9 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொது அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை காலை திருவனந்தபுரத்தில் உள்ள தர்பார் ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை மதியம் அவரது உடல் ஆலப்புழாவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா வெந்தலத்தறா வீட்டில் சங்கரன் – அக்காம்மாவின் மகனாக 1923-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி பிறந்தார். வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு 4 வயது இருக்கும்போது அவரது அம்மா மரணமடைந்தார். அவருக்கு 11 வயது ஆனபோது தந்தை காலமானார். ஆதரவற்ற நிலையும், வறுமையும் துரத்தியபோதும், படிப்பை விடாமல் தொடர்ந்தார் வி.எஸ்.அச்சுதானந்தன். சாப்பிட ஒருவேளை உணவுகூட கிடைக்காத நிலையில் சாதி பாகுபாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வி.எஸ்.அச்சுதானந்தனை கிண்டலடித்த சக சிறுவர்களை தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி அடித்து விரட்டினார்.

தனது 15-ம் வயதில் ஆஸ்பின்வால் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தொழிலாளர்களிடம் அதிக வேலை வாங்கிவிட்டு குறைந்த சம்பளம் கொடுக்கும் முதலாளிகளை எதிர்த்தார். வேலைக்கு தகுந்த ஊதியம் கேட்டு போராடினார். ஓராண்டிலேயே தொழிலாளர்களின் தோழனாக மாறினார். பல ஆண்டுகளாக கூலி கேட்டு முதலாளிகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த தொழிலாளர்களை இணைத்து போராடினார். 1964-ல் சி.பி.ஐ கட்சியில் இருந்து பிரிந்து சி.பி.எம் தொடங்கிய 32 பேரில் வி.எஸ்.அச்சுதானந்தனும் ஒருவர். 2006 முதல் 2011-ம் ஆண்டுவரை கேரள முதல்வராக இருந்தார். 2020-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். வி.எஸ்.அச்சுதானந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.