
நீலகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குலதெய்வமாக போற்றி வணங்கி வரும் இந்த மக்கள், விதைப்பில் தொடங்கி அறுவடை வரை ஒவ்வொரு நிகழ்வையும் குல தெய்வத்தை வணங்கிய பிறகே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்குந்தா கிராமத்தில் உள்ள காடெ ஹெத்தையம்மன் கோயிலில் ‘தெவ்வ ஹப்பா’ எனப்படும் அறுவடை திருவிழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. அறுவடை திருவிழா பிண்ணனி குறித்து பகிரும் கீழ் குந்தா கிராம மக்கள், ” நுாற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு திருவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ‘அரிக்கட்டுதல் மற்றும் ஹெத்தை அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் பனகுடி சிவன் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பனகுடியில் இருந்து ஹெத்தையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

14 ஊர்களில் இருந்து பாரம்பர்ய வெள்ளை உடைகளை உடுத்தி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மனமுருகி அம்மனை வணங்கினர். இதனைத் தொடர்ந்து, ‘அரிக்கட்டுதல்’ நிகழ்ச்சி தொடங்கியது. விவசாயம் செழிக்க பருவமழை தவறாமல் பொழிய வேண்டும் என புதிதாக விளைந்த கோதுமை, திணை உள்ளிட்ட பயிர்களைக் கொண்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் படுகர் சமுதாய மக்களின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கோயில் அறங்காவலர்கள் மற்றும் கீழ்குந்தா ஊர் பொதுமக்கள் செய்திருந்தோம்” என்றனர்.