• July 21, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நம் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, மக்களின் ஆதரவுடன் புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

ஆனாலும் கட்சி ஒரு அமைப்பாக இல்லையே என்ற ஒரு குறை மட்டும் இருந்தது. தற்போது பல்வேறு அணிகளும், அதற்கான தலைவர்களையும் நியமித்திருப்பதன் மூலம் அந்தக் குறை சரி செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ரூ.13,500/- கோடிக்கு போடப்பட்ட பட்ஜெட்டில் 99% சதவிகிதப் பணிகளை முடித்துவிட்டோம். 5,000 அரசுப் பணியிடங்களை நிரப்பியிருக்கிறோம். விரைவில் 2026 சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கிறது. நல்லது செய்பவர்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

அதனால் நாம் செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளர் தோல்வியை சந்தித்தது உண்மைதான். அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு.

அதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் நாம் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம். எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கும், எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. கண்டிப்பாக அனைத்துக்கும் பதிலளிப்போம். யாருக்காகவும் நாம் பயந்து போய் இல்லை.

தற்போதைய சூழலில் நாம் மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியமான ஒன்று. அதை வலியுறுத்துவது நம் கடமை. மாநில அந்தஸ்தை பெற்றுவிட்டால் நிர்வாகத்தில் நாம் இன்னும் விரைவாகப் பணியாற்ற முடியும். நம் அரசு கேட்கும் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதை செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி நம்மிடம் இருந்தாலும், அதிகாரம் ஆளுநரிடத்தில்தான் இருக்கிறது. நாம் எதை செய்ய வேண்டும் என்றாலும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமான ஒன்று. அந்த ஒப்புதலுக்கு காலதாமதம் ஏற்பட்டால், நம்மால் விரைவாக திட்டங்களை நிறைவேற்ற முடியாது.

தடைகளும், குழப்பங்களும் ஏற்படும். அப்படி எதுவும் நடக்காமல், திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெற வேண்டும் என்றால் நமக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *