
‘கூட்டணி ஆட்சி’ என்ற ஒரே வார்த்தையால் இன்றைய தேதியில் அரசியலில் பெரும் பிரளயம் உருவாகியிருக்கிறது. இத்தனை நாள் மென்மையான போக்கில் ‘அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்’ எனச் சொல்லிவந்த இபிஎஸ், இப்போது ‘ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல’ என அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணியை அமைத்த மேடையிலேயே, ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர், ஆனால் கூட்டணி ஆட்சிதான்’ என்ற நெருப்பை பற்றவைத்துவிட்டு சென்றார் அமித் ஷா. அமித் ஷாவின் வார்த்தையை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக தலைவர்கள் மேடைதோறும் கூட்டணி ஆட்சிதான் என பேசி வருகிறார்கள். பாஜகவின் வழியை பின்பற்றி பாமகவும் கூட்டணி ஆட்சிக்கு கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டது.