• July 21, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 1949-ஆம் ஆண்டு பிறந்தவர் அன்வர் ராஜா. பட்டதாரியான அன்வர் ராஜா பள்ளி மற்றும் கல்லூரிகளில் கால்பந்தாட்ட வீரராகவும் களம் கண்டவர். அண்ணாவின் பேச்சுகளினால் கவரப்பட்ட அன்வர் ராஜா திமுக மாணவர் அமைப்புகளில் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்தவர். அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி தலைமையிலான திமுக-வில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர், அதிமுக-வை துவங்கிய போது, எம்.ஜி.ஆரின் தலைமையை ஏற்று அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

அன்வர்ராஜா

எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்று கொண்ட அன்வர் ராஜாவுக்கு 1986-ல் மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகும் வாய்ப்பினை அளித்தார் எம்.ஜி.ஆர். அந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான உள்ளாட்சி பதவிகளை திமுக கைபற்றியது. அத்தகைய சூழலில் திமுக சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மிசா மாரிமுத்துவை தோல்வி அடைய செய்து மண்டபம் ஒன்றியத்தலைவர் பதவியில் அமர்ந்தார் அன்வர் ராஜா. இதன் பின்னர் இவரது அரசியல் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் ஏறு முகம்தான்.

ஏறு முகம்

மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில் அதிமுக-வின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் அன்வர்ராஜா. அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த இந்த குழுவில் அமைச்சர் பதவியில் இல்லாத இருவர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் அன்வர் ராஜா. அதிமுக அமைச்சர்கள் மட்டுமின்றி ஜெயலலிதாவிற்கும் இணையாக ஆட்சி மன்ற குழுவில் நியமிக்கப்பட்டவர் அன்வர் ராஜா.

ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் அன்வர்ராஜா

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுக இரு பிரிவாக பிரிந்த நிலையில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் அணியில் இணைந்தார். 1989-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஜானகி அணியின் சார்பில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளரான எம்.எஸ்.கே.ராஜேந்திரனிடம் தோல்வியை தழுவினார். இதன் பின் நடந்த தேர்தல்கள் சிலவற்றில் வாய்ப்பு கிடைக்காமலும், வாய்ப்பு கிடைத்து போட்டியிட்ட போது தோல்வியை தழுவியும் உள்ளார்.

மாவட்ட அதிமுக வில் அசைக்க முடியாத சக்தி!

2001 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அன்வர் ராஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்த ஜெயலலிதா, அந்த தேர்தலில் வென்ற அன்வர் ராஜாவுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியும் அளித்து அழகுபார்த்தார். அமைச்சராக இருந்த போது அன்வர்ராஜா மீது பல புகார்கள் வந்தும் அதனை எல்லாம் புறந்தள்ளி அன்வர் ராஜாவுக்கு ஆதரவளித்தார் ஜெயலலிதா. இதனால் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

அன்வர்ராஜா

இதனால் சிறுபான்மை நலவாரிய குழு உறுப்பினர், 2014 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான அன்வர் ராஜா வக்ஃபு வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் 70 வயதில் மூன்றாவது திருமணம் செய்த அவர், இது குறித்து ஜெயலலிதாவிடம் முன்னதாகவே அனுமதி பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2016 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மணிகண்டன் அமைச்சரானார். அவரது வருகைக்கு பின் அன்வர் ராஜாவின் அரசியல் செல்வாக்கு சரிவடைய தொடங்கியது. மூத்த அரசியல்வாதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அன்வர் ராஜாவை அமைச்சரான மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி முட்டல் மோதல்கள் நடந்தன. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் மணிகண்டன் தரப்பின் டார்ச்சர்கள் மேலும் அதிகரித்தன.

இந்த சரிவினை ஈடுகட்டவும், தன்னை முதிர்ந்த அரசியல்வாதியாக நிலை நிறுத்திக்கொள்ள எண்ணிய அன்வர் ராஜா, நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசினார். முத்தலாக் மசோதாவை கொண்டு வந்த பாஜகவினரை கடவுள் தண்டிப்பார் எனவும் சாபம் விட்டு கொதித்தார். இதனால் அதிமுக-வுக்குள்ளும் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் அடுத்து வந்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி தலைமை மீது வருத்தத்தில் இருந்த அன்வர்ராஜா தனது ஆதரவை சசிகலா பக்கம் திருப்பினார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

அதிமுக-வில் இருந்து கொண்டே ‘சின்னம்மாவை கட்சியில் சேர்க்க வேண்டும். கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் எனவும் குரல் உயர்த்தினார். இதனிடையே எடப்பாடி குறித்து தனது ஆதரவாளர் ஒருவரிடம் ஒருமையில் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 2021 நவம்பரில் அன்வர் ராஜா அதிமுக- வில் இருந்து நீக்கப்பட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காலத்தில், அன்வர் ராஜா திமுக-வில் சேர போவதாக பல முறை செய்திகள் வெளியாகின. அப்போது எல்லாம் நான் என்றைக்கும் அதிமுக தொண்டனாகவே இருப்பேன் என உறுதியாக சொல்லி வந்தார். இதன் பலனாக எடப்பாடியுடன் ஏற்பட்ட சமாதானத்தை தொடர்ந்து 2023-ல் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் அன்வர் ராஜா.

இதனை தொடர்ந்து அதிமுகவின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜாவை, தென்காசி தெற்கு மாவட்ட பூத் கமிட்டி அமைப்பு பொறுப்பாளராகவும் நியமித்தார் எடப்பாடி. தலைமையினால் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தாலும் அன்வர் ராஜாவை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமியும் அவரது ஆதரவாளர்களும் மதிக்காத நிலையே நீடித்தது. கட்சி கூட்ட அறிவிப்பு மற்றும் விளம்பரங்களில் அன்வர் ராஜாவின் பெயருக்கு உரிய இடம் தரப்படுவதில்லை.

பாஜக-வை ஆதரித்து அன்வர்ராஜா பிரசாரம்

இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன் தமிழ் நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில் பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் பாஜக-வின் எதிர்ப்புக்குள்ளானார். அன்வர்ராஜாவின் பேட்டி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக பாஜக புகார் எழுப்பிய நிலையில், எடப்பாடிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் அன்வர் ராஜாவை எடப்பாடி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

யாருக்கு பின்னடைவு?

அதிமுகவில் சிறுபான்மை மக்களின் முகமாக விளங்கிய அன்வர்ராஜா, அச்சமுதாய மக்களிடையே மதிக்கப்படும் அரசியல் பிரபலமாக இன்றும் இருந்து வருகிறார். அப்படி இருந்தும் அவரது கருத்திற்கு அதிமுக தலைமையில் உரிய இடம் கொடுப்பதில்லை. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் செய்து வரும் அன்வர் ராஜாவினால் இதனை ஏற்கமுடியவில்லை. இதனால் கட்சி தலைமையின் மீது கடும் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார் அன்வர் ராஜா.

அன்வர்ராஜா

இந்நிலையில்தான் சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தான் பயணித்த அதிமுக-வில் இருந்து விலகிய அன்வர்ராஜா, ”நாட்டில் பல்வேறு கட்சிகளை அழித்த கட்சியான பாஜக விரைவில் அதிமுகவையும் அழித்துவிடும். அண்ணாவின் கருத்தியலுக்கு எதிராக உள்ளவர்களுடன் கூட்டு வைத்துள்ள அதிமுக இப்போது பாஜகவின் கைகளில் சிக்கியிருக்கிறது” என கூறி திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.

அன்வர்ராஜாவின் இந்த முடிவு அதிமுகவுக்கு பின்னடைவா அல்லது அன்வர் ராஜாவுக்கு பின்னடைவா என வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *