
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது 2008 ஐபிஎல்லில் ஶ்ரீசாந்துடனான சண்டைதான் எனக் கூறியுள்ளார். அத்துடன் ஶ்ரீசாந்த் மகளுடனான உரையாடலையும் நினைவுகூர்ந்தவர், அது தனது இதயத்தை நொறுக்கியதாகக் கூறியுள்ளார்.
முதல் ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது. இதற்காக அவரை தொடரின் அடுத்த போட்டிகளில் இருந்து தடை செய்தது பிசிசிஐ. இதனால் 11 போட்டிகளில் ஹர்பஜன் விளையாடவில்லை.
எமோஷனலான Harbhajan Singh!
குட்டி ஸ்டோரீஸ் வித் அஷ் நிகழ்ச்சியில் அஸ்வினுடன் பேசிய ஹர்பஜன்சிங் அன்று நடந்த தவறுக்காக இன்றுவரை வருத்தப்பட்டு, மன்னிப்புக்கேட்டு வருவதாக தெரிவித்தார்.
“நான் என் கரியரில் இருந்து நீக்க விரும்புவது ஸ்ரீசாந்துடனான மோதலைத்தான். அன்று நடந்தது தவறனது, நான் அப்படி செய்திருக்கக் கூடாது. அதற்காக 200 முறைக்கும் மேல் மன்னிப்புக் கேட்டுவிட்டேன், ஒவ்வொரு மேடையிலும் மனம் வருந்துகிறேன்.
நாம் எல்லோருமே தவறுகள் செய்கிறோம். அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க முனைகிறோம்.
ஶ்ரீசாந்த் என் அணியைச் சேர்ந்தவர். நாங்கள் ஒன்றாக விளையாடுகிறோம். அந்தப் போட்டியில் நாங்கள் எதிரணியில் இருந்திருந்தாலும் நான் அப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது. அன்று நடந்தது முழுவதும் என்னுடையத் தவறுதான், அவர் என்னைத் தூண்டியிருந்தாலும், நான் செய்தது மிகத் தவறானது. நான் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.” என எமோஷனாலானார் ஹர்பஜன் சிங்.

“இதயம் நொறுங்கி, கண்கள் கலங்கியது”
45 வயதாகும் ஹர்பஜன் சிங் மிக உருக்கமாக ஶ்ரீசாந்த் மகளுடனான உரையாடலை விவரித்தார்.
“என்னை இன்னும் அழுத்தமாக தாக்குவது பல ஆண்டுகளுக்குப் பிறகு ஶ்ரீசாந்த் மகளுடனான எனது உரையாடல்தான். நான் மிகவும் அன்பாக அவளிடம் பேசினேன். அப்போது அவள், “நான் உங்களுடன் பேச விரும்பவில்லை, நீங்கள் என் அப்பாவை அடித்தவர் என்றாள்”. இதைக் கேட்டதும் என் இதயம் நொறுங்கியது, கண்ணீர் கட்டிவிட்டது.
என்னைப்பற்றி என்னவொரு அபிப்பிரயத்தை நான் அவளிடம் ஏற்படுத்தியிருக்கிறேன்? அவள் என்னை எத்தனை இழிவாக நினைத்துக் கொண்டிருப்பாள்? அவளது தந்தையை அடித்த ஒருவன் என்றுதான் நினைத்திருக்கிறாள் என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
“நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இப்போதும் ஶ்ரீசாந்தின் மகளிடம் மன்னிப்புக் கேட்கிறேன். என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. நான் இப்போதும் ‘ஆனால் உன்னை நன்றாக உணர வைக்கவும், நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று உன்னை நினைக்க வைக்கவும் நான் ஏதாவது செய்ய முடிந்தால், தயவுசெய்து என்னிடம் சொல்’ என அவளிடம் கேட்கிறேன்.
அவள் வளர்ந்தபிறகும் என்னை அதேப்பார்வையில் பார்க்க மாட்டாள் என நம்புகிறேன். அவளுடைய மாமா எப்போதும் அவளுடன் இருந்த தன்னால் முடிந்த ஆதரவை வழங்குவார் என அவள் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால்தான் அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் இருந்து நீக்க நினைக்கிறேன்.” எனப் பேசியுள்ளார்..
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…