
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை அக்கட்சியில் இணைந்தார். அதிமுக – பாஜக கூட்டணி மீது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து தன் அதிருப்தியை அன்வர் ராஜா வெளிப்படுத்தியிருந்த நிலையில் அவர் திமுகவில் இணைவார், அதுவும் இவ்வளவு சீக்கிரம் இணைவார் என்பதெல்லாம் எதிர்பாராத அரசியல் நகர்வாகவே இருந்தது.
இந்நிலையில், வரவிருக்கும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் மிக முக்கிய நகர்வுகளில் ஒன்றாக அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருக்கிறார். அன்வர் ராஜா திமுகவில் இணையப்போகிறார் என்ற செய்திகள் அரசல்புரசலாக சலசலக்கப்பட்ட நிலையில் அதை உறுதிப்படுத்துவதுபோல் முதலில் வந்தது இபிஎஸ்-ஸின் அதிரடி உத்தரவு. அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி அவர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அன்வர் ராஜா, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.