• July 21, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக சீனியராக இருந்த அன்வர் ராஜா இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

அன்வர் ராஜாவின் இந்த முக்கிய முடிவிற்கு, ‘அதிமுக – பாஜக கூட்டணி’ தான் காரணம் என்று கூறப்படுகிறது.

திமுகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களிடம் அன்வர் ராஜா, “இன்று முதல்வர் முன்பு திமுகவில் இணைந்துள்ளேன்.

பேரறிஞர் அண்ணா மற்றும் அவருக்கு பின்பு வந்த தலைவர்களின் தலைமையின் கீழ், நாங்கள் கருத்தியல் ரீதியாக வந்தவர்கள்.

இந்தி எதிர்ப்பு காலத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். தற்போது, அதற்கு புறம்பாக அதிமுக இருக்கிறது.

அதிமுக தற்போது கொள்கையில் இருந்து தடம்புரண்டு, பாஜகவின் கையில் சிக்கி உள்ளது.

பாஜக – அதிமுக கூட்டணி

முதலமைச்சர் யார்…?

அங்கு கூட்டணி எல்லாம் கிடையாது. ‘என்.டி.ஏ கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். ஆட்சியில் பாஜகவும் இடம்பெறும்’ என்று அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார்.

அமித் ஷா மூன்று முறை பேட்டி தந்துள்ளார். ஆனால், அவர் ஒரு இடத்தில் கூட, ‘எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர்’ என்று குறிப்பிடவில்லை.

10 – 12 நாள்களாக, எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த 10 நாள்களும், அவர் தமிழ்நாட்டு மக்களிடம், ‘நான் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்’ என்று கூற முயற்சி செய்து வருகிறார். ஆனால், அதை அவரால் உறுதிபடுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் அவர் உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியும், ட்ரம்பும்!

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரை நான் தான் நிறுத்தினேன் என்று குறைந்தது 20 முறையாவது ட்ரம்ப் கூறியிருப்பார். ஆனால், யாரும் அதை கேட்கவில்லை.

அதே போல தான், எடப்பாடி பழனிசாமியும், ‘நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

அதிமுகவை சீரழிப்பதற்காகத் தான், பாஜக அதிமுகவுடன் சேர்கிறது. இதற்கு பல முன்னுதாரணம் இருக்கிறது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

மம்தா பானர்ஜி கட்சி

மம்தா பானர்ஜியை விட, துணிச்சலான தலைவர் இந்திய துணை கண்டத்தில் இல்லை. ஆனால், அவரது கட்சியையே உடைத்து, சிதைத்தது பாஜக.

அவரது கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக இருந்த சுவேந்து அதிகாரியை மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிட வைத்தார்கள். அதில் மம்தா பானர்ஜி தோற்றார்.

ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி வெற்றி பெற்றதால், அவர் முதலமைச்சர் ஆனார். அதன் பிறகு, அவர் இடைதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதே போல தான், தேவகவுடாவின் மகன் குமரசாமி பாஜக உடன் கூட்டணி வைத்தார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

உத்தவ் தாக்ரேயின் ஆட்சி என்ன ஆனது? அவருடைய கட்சி எவ்வளவு அருமையான கட்சி? அதை அழித்துவிட்டார்கள்.

எந்தக் கட்சியில் பாஜக சேர்ந்தாலும், அந்தக் கட்சியை அழிப்பது தான் அவர்களது நோக்கம்.

பாஜக-வின் அஜெண்டா

அதிமுகவை அழித்துவிட்டு, திமுக உடன் சண்டையிட வேண்டும் என்பது தான் பாஜகவின் தற்போதைய அஜெண்டா. அதை தான் அவர்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் கூட, அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று கூறவில்லை. ‘என்.டி.ஏ கூட்டணி ஆட்சி தான் நடக்கும்’ என்று கூறுகிறார்.

இது குறித்து, நேற்று முன்தினம் தான், எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி இல்லை’ என்று கூறியிருக்கிறார். இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக – அதிமுக கூட்டணி

என்னுடைய ஒரே ஆப்ஷன்

தமிழ்நாட்டை பொறுத்தவரை, பாஜக ஒரு நெகட்டிவ் ஃபோர்ஸ். தமிழ்நாடு மக்கள் அவர்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள்.

அதிமுக கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று எவ்வளவோ கூறிபார்த்தேன். ஆனால், அவர்கள் கேட்பதாக இல்லை.

அதற்கு அடுத்ததாக, எனக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் திமுக தான். அதனால் தான், இங்கு இணைந்துள்ளேன்.

மீண்டும் தளபதி தான் ஆட்சி அமைப்பார்.

தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவரை நம்பி தான் வாக்களிக்கிறார்கள். அதை வைத்து தான் இதை கூறுகிறேன்.

1967-ம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவை சுற்றி ராஜாஜி, மா.பொ.சி, காயிதே மில்லத், சி.ப.ஆதித்தனர் என்று பல முக்கிய தலைவர்கள் இருந்தனர்.

இவர்களுடைய அணி அருமையான அணி என்பதால் மக்கள் இவர்களை ஆதரித்தார்கள்.

1971-ம் ஆண்டு கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர் இணைந்து தேர்தலை சந்தித்தால், மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள்.

அதற்கு பிறகு, யாருக்கு ஓட்டு, அம்மாவின் தலைமைக்கு ஓட்டு, கலைஞரின் தலைமைக்கு ஓட்டு என்று இருந்தது.

தலைவரின் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பின் அடையாளமாகத் தான் ஆட்சி நடைபெறுகிறது.

ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யார்?

‘தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யார்?’ – இது தான் என்னுடைய ஒரே கேள்வி.

எடப்பாடியா… ஸ்டாலினா என்றால் எடப்பாடியை விட, 15 சதவிகித அதிக வாக்குகளைப் பெற்று ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்.

ஸ்டாலினுக்கு இணையான தலைவர் அதிமுகவில் இல்லை. இனிமேல் வருவார்களா என்பதும் சந்தேகம் தான்.

அதனால் தான், திராவிட இயக்கத்தின் கொள்கை, மாநில சுயாட்சி, மொழி, இனத்தைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், மத்திய அரசு பாரா முகமாக இருந்தால், நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்புகளை வாங்கி இந்தியாவிற்கே முன்னுதரணமாக இருக்கும் மிகப்பெரிய தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது எல்லோருக்கும் தெரியும். அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி, பாஜக எதிர்ப்பை கூர்மைப்படுத்தியவர் ஸ்டாலின்.

இப்படிப்பட்ட முதலமைச்சர் தான் மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்… விரும்புவார்கள்.

இவர் தான் மீண்டும் ஆட்சியமைப்பார்.

என்னை அன்போடு வரவேற்று, இணைத்துகொண்ட முதலமைச்சருக்கு நன்றி

அதிமுகவின் மூத்த தலைவர்கள் வருத்தத்தில் தான் இருக்கின்றனர்.

அதிமுகவை பார்த்து பாஜக அப்போது அஞ்சியது!

முன்பு, அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்தப்போது, பாஜக அதிமுகவிற்கு, அம்மாவிற்கு அஞ்சினார்கள். வாஜ்பாய்-ஜி அதிமுகவை கெடுக்க நினைக்கவில்லை.

ஆனால், இப்போது அமித் ஷா-ஜியும், மோடி-ஜியும். அதனால், அந்தக் கூட்டணியும், இந்தக் கூட்டணியும் வேறு.

ஒருவேளை, பாஜகவில் ஐந்து பேர் வெற்றி பெற்றாலும், அமைச்சரவையில் இடம்பெற்றாலும், 10 நாள்களில் ஆட்சியை கலைத்து, பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சர் ஆகிவிடுவார்கள். இதை அவர்கள் செய்வார்கள்… இதற்கு முன்பும் செய்திருக்கிறார்கள்.

நான் மட்டுமல்ல… ஏழு முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் ஒற்றுமை வேண்டும், அதை மீண்டும் எழுச்சி பெற வேண்டுமானால் என்று சில யுக்திகளை கூறி மூன்று மணிநேரம் எடப்பாடி பழனிசாமி வீட்டில் விவாதம் நடந்தது.

ஆனால், அதை கடைசி வரை எடப்பாடியார் ஏற்றுக்கொள்ளவில்லை”. என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *