• July 21, 2025
  • NewsEditor
  • 0

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவைப் பகிர்ந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

அந்த வீடியோ பராக் ஒபாமா, “அதிபர் சட்டத்துக்கு மேலானவர்” எனக் கூறுவதைப் போலவும், அதற்கு அமெரிக்க அரசியல்வாதிகள் “யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது” எனக் கூறுவதைப் போலவும் தொடங்குகிறது.

பின்னர் ஓவல் அலுவகத்திலேயே இரண்டு FBI ஏஜென்ட்கள் ஒபாமாவைக் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதை அதிபர் ட்ரம்ப் பார்த்து சிரிப்பதுபோல AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ வருகிறது.

இந்தப்போலி வீடியோவில் ஒபாமா கைதிகளுக்கான ஆரஞ்சு உடையுடன் கம்பிகளுக்குப் பின்னால் அமர்ந்திருப்பதாகவும் காட்டப்படுகிறது.

இந்த வீடியோ அமெரிக்க அரசியலில் புழுதியைக் கிளப்பியிருக்கிறது. பலரும் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதை அதிபர் ட்ரம்ப் குறிப்பிடவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர். அவர் ‘பொறுப்பில்லாமல்’ நடந்துகொள்கிறார் என விமர்சித்தனர்.

கடந்த வாரம் ஒபாமாவை, “மிகப் பெரிய தேர்தல் மோசடிக்காரர்” என ட்ரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துளசி கபார்ட்

மேலும் கடந்த வாரம் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட், 2016 தேர்தலில் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்க ஒபாமா மற்றும் அவரது அதிகாரிகள் ட்ரம்ப்புக்கு ரஷ்யாவுடன் தொடர்பு இருப்பதாக ஒரு தியரியை உருவாக்கியதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் ஒபாமாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

“டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பராக் ஒபாமா மற்றும் அவரது உயர் மட்ட அதிகாரிகள் 2016ம் ஆண்டு உளவுத்துறையை தங்களது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது அமெரிக்க மக்களின் விருப்பத்துக்கு மாற்றான, நம் இறையாண்மையை குறை மதிப்புக்கு உள்ளாக்கும் செயல்” என எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார் துளசி கபார்ட்.

கடந்த 2016ம் ஆண்டு, பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் தேசிய உளவு இயக்குநரகம் வெளியிட்ட 114 பக்க ஆவணங்கள் “ரஷ்யாவின் சைபர் முயற்சிகளால் அமெரிக்க தேர்தல் பாதிக்கப்படவில்லை” எனத் உறுதியாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *