
கூடுதலாக வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடூரமாகச் சித்திரவதை செய்த மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
தனியார்ப் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார்.
கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, கணவரின் தங்கை அனிதா ஆகியோர் தங்கபிரியாவைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
60 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைப் பொருட்கள் திருமணத்தின்போது கொடுக்கப்பட்டது. வீடு கட்டுவதற்குப் பல லட்சம் பணமும், நகையும் கூடுதலாக வேண்டும் எனத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
கொடுமை தாங்காமல் இடையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற தங்கபிரியாவைச் சமாதானம் பேசி பூபாலன் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தங்கபிரியாவைத் தினமும் கடுமையாகச் சித்திரவதை செய்து வந்த பூபாலன், சில நாட்களுக்கு முன் போலீஸ் கஸ்டடியில் கைதிகளைச் சித்திரவதை செய்வதைப்போல் தங்கபிரியாவின் முகத்தை நகத்தால் பிராண்டி, கால், கை மூட்டுகளை உடைத்து, குரல்வளையை நெறித்து சித்திரவதை செய்ததோடு, இந்தக் கொடுமையைத் தன் சகோதரிக்கு போனில் மகிழ்ச்சியாக விவரித்துள்ளார்.
அந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்திரவதையால் பலத்த காயமடைந்த தங்கபிரியா, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அப்பன் திருப்பதி காவல்துறையினர், தனிப்படை அமைத்து பூபாலன் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினரைத் தேடி வந்த நிலையில், திருப்பூரில் மறைந்திருந்த பூபாலனைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் கொடுமைக்கு உடந்தையாக இருந்த பூபாலனின் தந்தையும் இன்ஸ்பெக்டருமான செந்தில்குமரன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.