
டெல்லி உத்தம்நகரில் வசித்தவர் கரண் தேவ் (36). இவரது மனைவி சுஷ்மிதா. கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக எலக்ட்ரிக் ஷாக் பட்டுவிட்டதாகக் கூறி கரண் தேவை அவரது மனைவியும், உறவினர்களும் அங்குள்ள ராணி ரூப்ராணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் அவரைச் சோதித்துப் பார்த்தபோது கரண் தேவ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து விபத்து மரணம் என்பதால் பிரேதச் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் கரண் தேவ் வயது போன்ற காரணங்களைக் காட்டி பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கு சுஷ்மிதாவும், அவரது மாமனாரும், சுஷ்மிதாவின் மைத்துனர் ராகுலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை மீறி கரண் தேவ் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மரணம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்ட நிலையில், கரணின் சகோதரர் குணால் போலீஸாரைச் சந்தித்து தனது சகோதரனை அவரது மனைவியும், எங்களது பெரியப்பா மகன் ராகுல் ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகப்படுவதாகத் தெரிவித்தார்.
அதற்கு ஆதாரமாக ராகுலும், சுஷ்மிதாவும் தங்களது இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்த விபரங்களைக் கொடுத்தார். இருவரும் கொலை தொடர்பாக விவாதித்துள்ளனர். அதோடு ராகுலுக்கும், சுஷ்மிதாவிற்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் சாட்டிங் மூலம் தெரிய வந்தது.
அவர்களது உறவுக்கு இடையூராக கரண் இருந்ததால் அவரைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கரணுக்கு இரவு சாப்பாட்டின் போது 15 தூக்க மாத்திரைகளை சுஷ்மிதா கொடுத்துள்ளார். அதன் பிறகு கரண் மயக்கமடையும் வரை சுஷ்மிதா காத்திருந்துள்ளார். தூக்க மாத்திரை சாப்பிட்டால் எவ்வளவு நேரத்தில் மரணம் வரும் என்று இருவரும் கூகுளில் தேடிப் பார்த்துள்ளனர்.
நீண்ட நேரம் கரண் மயக்க நிலையில் இருந்துள்ளார். அதோடு மூச்சுவிட்டுக்கொண்டிருந்ததை சுஷ்மிதா கண்டுபிடித்து இது குறித்து தனது காதலனிடம் தெரிவித்தார்.
அப்படியென்றால் எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும்படி இன்ஸ்டாகிராமில் ராகுல் தெரிவித்துள்ளார். அதன் படி சுஷ்மிதா தனது கணவனுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் மெதுவாக இதயத் துடிப்பு இருப்பதாக சுஷ்மிதா தனது காதலனுக்குத் தெரிவித்தார்.
அதற்கு எஞ்சி மாத்திரைகளையும் கொடுக்கும்படி ராகுல் தெரிவித்தார். ஆனால் தன்னால் கரண் வாயைத் திறக்க முடியவில்லை என்றும், என்னால் தண்ணீர் வேண்டுமானால் ஊற்ற முடியும், மருந்து கொடுக்க முடியாது என்றும், நீயும் வந்தால் இரண்டு பேரும் சேர்ந்து மருந்தைக் கொடுக்க முயற்சி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியில் கரண் இறந்த பிறகு அருகில் இருந்த தனது மைத்துனர் ராகுல் வீட்டிற்குச் சென்று தனது கணவருக்கு எலக்ட்ரிக் ஷாக் அடித்து கீழே மயங்கி விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கரணை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர்.

கொலையை இரண்டு பேரும் சேர்ந்து விபத்தாக மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் இருவரும் சேர்ந்து இதற்காக இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்த விவரம் கரணின் சகோதரர் குணாலுக்குத் தெரிய வந்ததால் இருவரும் சிக்கிக்கொண்டனர்.
குணால் கொடுத்த சாட்டிங் ஆதாரங்களின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் இரண்டு பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
சுஷ்மிதா அளித்துள்ள வாக்குமூலத்தில், கர்வா சவுத் பண்டிகையின் போது கரண் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அடிக்கடி பணம் கேட்டுத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.