
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க. முத்து மறைந்ததையடுத்து, ஸ்டாலினைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மு.க.முத்து உடல்நலக்குறைவால் ஜூலை 19 காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சித்ரஞ்சன் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். நா.த.க-வும், தி.மு.க தரப்பும் சமகால அரசியலில் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொள்ளும் சூழலில் இச்சந்திப்பு கவனம் பெற்றிருக்கிறது.
உபசரித்த முதல்வர்.. நெகிழ்ந்த சீமான்!
2021-ம் ஆண்டு சீமானின் தந்தை செந்தமிழன் மறைந்ததையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அரசியல் முரண் கடந்து போனில் அழைத்து ஆறுதல் சொன்னதோடு, அமைச்சர் பெரிய கருப்பணை இறுதிச் சடங்குக்கு அனுப்பி வைத்தார்.
‘வரம்பு மீறி விமர்சித்தாலும் முதல்வர் அதையெல்லாம் மறந்து ஆறுதல் சொன்னாரே’ எனச் சகாக்களிடம் அடிக்கடி சொல்வாராம் சீமான்.
இந்நிலையில், மு.க முத்து மறைவு செய்தி கேட்டதுமே நேரில் செல்ல முடிவெடுத்து, முதல்வரிடம் நேரம் கேட்டிருக்கிறது நா.த.க தரப்பு, முதல்வர் இசைவு தெரிவிக்கவே, நா.த.க-வின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், நா.த.க-வின் முக்கியப்புள்ளி தேவா உள்ளிட்டோருடன் முதல்வர் இல்லத்துக்கு வந்திருக்கிறார்கள்.
“தமிழக முதல்வரிடம் மு.க. முத்துவின் இறுதிக்காலம் குறித்துக் கேட்டறிந்துவிட்டு, ‘தைரியமா இருங்க..’ என ஆசுவாசப்படுத்தியிருக்கிறார் சீமான். அப்போது மு.க.முத்துவின் திரைப்பயணம் பற்றி தனது இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கவலையடைந்த முதல்வரிடம் ஆறுதல் சொல்லியிருக்கிறார் சீமான்.
சூடான ‘டீ’-யுடன் தொடர்ந்த சந்திப்பில்.. ‘அம்மா எங்க இருக்காங்க… ஊருல அவங்கள யார் பாத்துகிறாங்க.. வீட்டுல எல்லாரும் நலம்தானா..’ என உரிமையுடன் ஸ்டாலின் வினவ நெகிழ்ந்திருக்கிறார் சீமான்..
‘மு.க. முத்துவின் படங்களில் நடித்த போது தமிழ் சினிமாவின் போக்கு, அந்தச் சமயத்தில் கோலோச்சிய எம்.ஜி.ஆர் குறித்து தன் பாணியில் சுவாரஸ்யமாக சீமான் விவரிக்க, உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார்கள் முதல்வரும் துணை முதல்வரும்.
சுமார் 20 நிமிடங்கள் நீண்ட உரையாடலில் ‘அரசியல் டச்’ இல்லாமல் சீமானும் துணை முதல்வர் உதயநிதியும் சில நிமிடம் உரையாடியிருக்கிறார்கள்.
இறுதியாக, ‘ஹெல்த் பாத்துக்கோங்க சீமான்’ எனச் சொல்லிவிட்டு முதல்வரும் துணை முதல்வரும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தது, தி.மு.க புள்ளிகளையே ஆச்சரியப்படுத்திவிட்டது” என்றனர் சித்தரஞ்சன் சாலை வட்டாரத்தில்.

“கூட்டணி ஆட்சி பேச்சுக்கே இடமில்லை”
முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்பு, மாண்பு கருதி முதல்வருடன் சந்திப்பு நடந்தது. கடுமையாக விமர்சிப்பது வேறு. நேரில் ஆறுதல் கூறுவது வேறு.
அரசியல் கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால் ‘கூட்டணி ஆட்சி’ பேச்சுக்கே இடமில்லை.. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால்தான் கூட்டணி ஆட்சி சூழல் உருவாகும்” என்றார்.