
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அருணாபென்.
இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் திலீப் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.
திலீப் மணிப்பூரில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்கு வரும்போது அருணாபென்னுடன் தங்கி இருப்பது வழக்கம். தற்போது விடுமுறைக்கு வந்து அருணாவுடன் திலீப் தங்கி இருந்தார். இருவரும் அகமதாபாத்திற்கு ஷாப்பிங் சென்று வந்தனர். வந்த பிறகு இருவருக்கும் இடையே இரவில் வாக்குவாதம் ஏற்பட்டது.
திலீப் தாயார் குறித்து அருணா ஏதோ தவறாக பேசி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் திலீப் அருணாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.
அதன் பிறகுதான் கொலை செய்துவிட்டோமே என்ற அச்சத்தில் தானும் தற்கொலை செய்து கொள்ள திலீப் முயன்றார். கையில் வெட்டிக்கொண்டு வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்தார். ஆனால் அதில் தப்பித்துக்கொண்டார். அவர்கள் இருவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அவர்களது வீட்டில் இருந்து இரவில் சண்டை போட்டுக்கொண்ட சத்தம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கேட்டது. ஆனால் அவர்கள் போலீஸில் சொல்லவில்லை.

இரவு 10 மணிக்கு கொலை செய்த திலீப் இரவு முழுவதும் அருணாவின் உடலுடன் இருந்தார். காலையில் அருணா வேலை செய்து வந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று அருணாவை கொலை செய்துவிட்டதாக கூறி திலீப் சரணடைந்தார்.
உடனே போலீஸார் விரைந்து சென்று அருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திலீப்பை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் இருவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நீண்ட காலமாக இருவரும் நட்பில் இருந்து வந்துள்ளனர் என்றும் தெரிய வந்ததுள்ளது.