
இத்தனை வாரங்களா, ’70-கள்ல தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு’ன்னுதான் இந்தத் தொடரை ஆரம்பிப்போம். ஆனா, இந்த வாரம் நாம எழுதப்போற நடிகை ஓர் அழகான விதிவிலக்கு. 70-களோட மத்தியில ஆரம்பிச்சு 80-கள், 90-கள் வரைக்கும் தொடர்ந்து 20 வருஷம், அழகு, நடிப்பு, டான்ஸ், ஸ்டைல், கிளாமர்னு எல்லாத்துலேயும் ஒரு பெஞ்ச் மார்க் செட் பண்ணி, கோலிவுட்ல ஆரம்பிச்சு பாலிவுட் வரைக்கும் ரூல் பண்ண நடிகை ஸ்ரீதேவியோட பர்சனலை தான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..!
ஸ்ரீதேவி, அவங்கப்பா வழியில சிவகாசி, அனுப்பன்குளம் நகராட்சியில இருக்கிற மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொண்ணு. அப்பாஅய்யப்பன் சட்டக் கல்லூரில படிக்கிறதுக்காக சென்னை வந்திருக்கிறார். வந்த இடத்துல, சினிமா ஹீரோயின் கனவோட சின்னச்சின்ன ரோல் மற்றும் டான்ஸ் பண்ணிக்கிட்டிருந்த ராஜேஸ்வரியை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டார். ராஜேஸ்வரியோட பூர்வீகம் ஆந்திரா. இந்தத் தம்பதிக்கு, ஸ்ரீ அம்மா, ஸ்ரீலதான்னு ரெண்டு பெண் குழந்தைங்க பிறக்கிறாங்க. ஸ்ரீ அம்மாதான், பின்னாள்ல நடிகை ஸ்ரீதேவியா இந்தியத் திரையுலகை ஆண்டவங்க.
ஸ்ரீதேவியோட அப்பாவும் கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள். ஒருமுறை சிறுமி ஸ்ரீதேவியைப் பார்த்த கண்ணதாசன், அந்தக் குழந்தையின் அழகைப்பத்தி சின்னப்ப தேவரிடம் சொல்லியிருக்கார். அவருக்கோ, ஸ்ரீதேவியைப் பார்த்தவுடனே முருகனே குழந்தையாக வந்ததுபோல இருந்ததாம். உடனே, தான் தயாரிச்சிக்கிட்டிருந்த ‘துணைவன்’ படத்துல பாலமுருகனா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தியிருக்கார். அப்போ, ஸ்ரீதேவிக்கு வயசு நாலு. அடுத்தப்படம் கந்தன் கருணை. அதுலேயும் முருகன் வேடம்.

இதுக்குப்பிறகு, ஸ்ரீதேவியை இந்தியத் திரையுலகம் ஒரு நிமிஷம்கூட விட்டு விலகலைன்னுதான் சொல்லணும். கடவுளா, சிறுவனா, சிறுமியா, தமிழ், தெலுங்கு, மலையாளம்னு பல மொழி படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாங்க. அந்தக் காலகட்டத்துல எம்ஜிஆர், சிவாஜின்னு உச்ச நட்சத்திரங்களோட குட்டி நட்சத்திரமா மின்னிக்கிட்டிருந்தவங்க, பாலிவுட்லேயும் காலடி எடுத்து வெச்சாங்க. 1975-ல நடிகை லட்சுமி ஹீரோயினா நடிச்ச ‘ஜூலி’ இந்திப்படத்துல அவங்களோட தங்கை ரோல் பண்ணாங்க. அப்போ ஸ்ரீதேவி வயசு 12.
ஸ்ரீதேவியோட மலையாளப்படம் ஒண்ணைப்பார்த்த டைரக்டர் கே. பாலசந்தர், 1976-ல தன்னோட ’மூன்று முடிச்சு’ படத்துல ரஜினிக்கும் கமலுக்கும் ஜோடியா நடிக்க வெச்சார். இதுதான் தமிழ்ல ஸ்ரீதேவி ஹீரோயினா நடிச்ச முதல் படம். அந்தக் குழந்தை முகம், படம் முழுக்க நடிப்புல மிரட்டியிருக்கும். அடுத்த வருடம் பாரதிராஜாவோட ’16 வயதினிலே’ படத்தோட மயில் ஆனார் ஸ்ரீ. மினிமம் மேக்கப்லேயே ஸ்ரீதேவியோட அழகு இந்தப்படத்துல நம்மை பிரமிக்க வெக்கும்.

இந்தப்படம் பத்தி பேட்டி ஒண்ணுல, ‘’அந்தப் படத்துல செந்தூரப்பூவே பாட்டைதான் முதல்ல ஷூட் பண்ணாங்க. பாட்டு முழுக்க செடி, கொடி, பூக்களோட தானே ஆடுவேன். அதனால, அங்கங்கே என்னை எறும்புக் கடிச்சி வலி தாங்க முடியல. ஷூட்டிங்க்கு என்னால தடை வரக்கூடாதுன்னு யார் கிட்டேயும் சொல்லவே இல்லை’’ங்கிறார் ஸ்ரீ. ’16 வயதினிலே’ படத்தை ஹிந்தியிலும் பாரதிராஜா டைரக்ட் செய்ய, மயில் பாலிவுட்டிலும் ஹீரோயின் ஆனாங்க. பட், 1983-ல ஸ்ரீதேவி நடிச்ச ’ஹிம்மத்வாலா’தான் இந்தியில தனக்கு பெரிய பிரேக் கொடுத்துச்சுன்னு ஸ்ரீதேவியே ஒரு பேட்டியில சொல்லியிருக்காங்க.
தமிழ்ல 1982-ல பாலு மகேந்திராவோட மூன்றாம் பிறையில பழைய விஷயங்களை மறந்துபோன நாயகியா நடிச்சிருப்பாங்க ஸ்ரீதேவி. அந்த டைப் ஆஃப் கேரக்டர்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஏன் இந்தியாவுல இருக்க அத்தனை மொழிகள்லேயும் எத்தனையோ நாயகிகள் நடிச்சிருந்தாலும், மூன்றாம் பிறையில ஸ்ரீதேவியோட நடிப்பையும், அந்த கேரக்டருக்கு 100% சப்போர்ட் பண்ண அவரோட குழந்தைத்தனமான முகத்தையும் இன்னிக்கு வரைக்கும் யாராலேயும் கிராஸ் பண்ண முடியலைங்கிறதுதான் நிஜம். இனியும் அப்படியொரு கேரக்டரை இன்னொரு நடிகையால ஸ்ரீதேவி அளவுக்கு செய்ய முடியுமாங்கிறதும் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

இந்தப் படம் பத்தி, இன்டர்வியூ ஒண்ணுல ஸ்ரீ பேசுறப்போ, ’’மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் சீன்ல நடிக்கிறப்போ நான் ரொம்ப பயந்தேன். தியேட்டர்ல என்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, படம் வந்ததுக்கு அப்புறம் எல்லாரும் பாராட்டதான் செஞ்சாங்க. அதை என்னால மறக்கவே முடியாது. இப்போ, ரீசன்ட்டா ’மூன்றாம் பிறை’ படத்தைப் பார்த்துட்டு என் பொண்ணுங்க ’இப்படில்லாம் எப்படிம்மா நடிச்சேன்’னு கேட்டு அழுதாங்க’’ன்னு, கண் கலங்கி சொல்லியிருந்தாங்க. மூன்றாம் பிறையும் இந்தியில ரீமேக் செய்யப்பட்டுச்சு. அதுலேயும் ஸ்ரீ தான் ஹீரோயின்.
ஸ்ரீதேவி நடிச்சப் படங்களை தென்னிந்திய மொழிப்படங்களைப் பட்டியலிட்டா இந்தக் கட்டுரை போதாதுங்கிறதால, அவங்களோட பாலிவுட் வெற்றிக்கதைக்குள்ளே நாம போயிடுவோம். 1986-ல ஸ்ரீதேவி நடிச்ச ‘நாகினா’ சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப்படத்துல இச்சாதாரி நாகமாக ஸ்ரீதேவி ஆடின பாம்பு டான்ஸ்ல அவங்களோட கரிஷ்மா வேற லெவல்ல இருக்கும். இன்னிக்கு வரைக்கும் பாலிவுட்டோட பெஸ்ட் நடனங்கள்ல இதுக்குதான் முதல் இடம். 1987-ல அணில் கபூரோட ஸ்ரீதேவி நடிச்ச ‘மிஸ்டர் இந்தியா’ படம், பாலிவுட்ல இன்னிக்கு வரைக்கும் அவங்களோட நடிப்புக்காகவும் அழகுக்காகவும் கொண்டாடப்பட்டுக்கிட்டிருக்க ஒரு படம்.

பூசின மாதிரி இருக்குற தென்னிந்திய ஹீரோயின்களை பாலிவுட் ஏத்துக்காதுங்கற தடையை முதல்ல பிரேக் பண்ணது ஹேமா மாலினி. அதுக்கப்புறம் ரேகா. ஸ்ரீதேவி பாலிவுட்ல என்ட்ரியானப்போ இவங்க ரெண்டு பேருமே பாலிவுட்ல சக்சஸ்ஃபுல்லா இருந்தாங்க. ஆனா, சவுத்லேயும் ஜெயிச்சி, பாலிவுட்லேயும் ஜெயிச்சது, பாலிவுட்டோட முதல் லேடி சூப்பர் ஸ்டாரான நம்ம சிவகாசிப்பொண்ணுதான்.
ஸ்ரீதேவி தன்னோட கரியரை எந்தளவுக்கு நேசிச்சாங்க அப்படிங்கிறதுக்கு உதாரணமா ரெண்டு சம்பவங்களைச் சொல்லலாம். ஒரு மலையாளப்படம் ஷூட்டிங்ல கால் பிராக்ச்சர் ஆன ஸ்ரீதேவியை, கமலோட ‘கல்யாணராமன்’ பட சூட்டிங்குக்கு தூக்கிட்டுதான் வருவாங்களாம். ரஜினியோட ‘தர்மயுத்தம்’ படத்துல வர்ற ‘ஆகாய கங்கை’ பாட்டுல பெரும்பாலான நேரம் ஸ்ரீதேவி உட்கார்ந்துக்கிட்டே தான் இருப்பாங்க.
ஸ்ரீதேவி ரொம்ப அம்மா செல்லம். எல்லாத்துக்குமே அம்மாவையே சார்ந்து இருந்திருக்காங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல அம்மா கொஞ்ச நேரம் பக்கத்துல இல்லைன்னாலும் பதறிடுவாங்களாம். இயல்பும் ரொம்பவே சாஃப்ட். ஆனா, காலம் அவங்களையும் வலிமையாக்குச்சு. அதுவொரு கடினமான உண்மைக்கதை.

அப்பாவோட இன்னொரு திருமணம், கொஞ்சமும் எதிர்பார்க்காத அம்மாவோட மரணம், அவங்க நேசிச்ச காதல் கைகூடாம போனதுன்னு எக்கச்சக்க பிரச்னைகள்… அவங்க பாலிவுட்ல உச்சத்துல இருக்கிறப்போ தான் இத்தனையும் கிராஸ் பண்ணியிருக்காங்க. அப்பா 90-ல இறக்க, அம்மா 96-ல இறந்துப்போயிருக்காங்க. அதே வருஷம்தான் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செஞ்சிருக்காங்க. தன்னோட இழப்புகள்ல இருந்து மீள, தன்னோட அம்மா இடத்துல இருந்து தன்னை பாதுக்காக்கன்னு இந்த ரெண்டு காரணங்களுக்காகத்தான், ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செஞ்சிக்கிட்டாங்கன்னு அப்போ பேசப்பட்டுச்சு.
போனி கபூர் ஸ்ரீதேவியை ஒருதலையா லவ் பண்ணதா பேட்டிகள்ல ஓப்பனா சொல்லியிருக்கார். ஆனா, அவரோட காதலை ஸ்ரீ கிட்ட சொன்னப்போ, அவருக்கு மேரேஜ் ஆகி ரெண்டு குழந்தைங்க இருந்திருக்காங்க. மேரேஜ் ஆன ஒருத்தர் நம்மள லவ் பண்றேன்னு சொல்றாரேன்னு ஆரம்பத்துல தயங்கின ஸ்ரீதேவி, அம்மாவை இழந்ததுக்கு அப்புறம் போனி கபூரை கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அந்த காலகட்டத்துல, இந்தித் திரையுலகமே போனி கபூரோட ஃபேமிலிய ஸ்ரீதேவி தான் உடைச்சிட்டாங்கன்னு விமர்சனம் பண்ணியிருக்கு. ஸ்ரீதேவி கர்ப்பமா இருக்குறப்போ, போனி கபூரோட முதல் மனைவி ஸ்ரீதேவியை பொதுவெளியில தாக்கினதா பரபரப்பா செய்திகளும் வந்துச்சு.

ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷின்னு ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்ததும், குடும்பம், குழந்தைகள்னு கிட்டத்தட்ட 15 வருடம் சினிமால நடிக்காம இருந்திருக்காங்க ஸ்ரீதேவி. ‘’ஒரு அம்மாவா குழந்தைகளைப் பார்த்துக்கிறது, அவங்களை ஸ்கூல்ல விடுறது, ஸ்போர்ட்ஸ் டேவுல அவங்க ஜெயிக்கிறதை பார்க்கிறதுன்னு அப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்’’னு பேட்டி ஒண்ணுல சொல்லியிருக்காங்க ஸ்ரீ.
ஸ்ரீதேவியோட இன்னொரு திறமையைப்பத்தி பலருக்கும் தெரியாது. அவங்க ரொம்ப அழகா ஓவியம் வரைவாங்க. சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரையறதுல ஆர்வமா இருந்த ஸ்ரீதேவி கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தைகளோட வீட்ல இருந்தப்ப ஒர் ஓவியர் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டு நிறைய ஓவியங்கள் வரைஞ்சிருக்காங்க, அந்த ஓவியங்களை ஏலம் விட்டு சிலருக்கு உதவிகளும் செஞ்சிருக்காங்க.

சினிமாவுக்கு பிரேக் எடுத்த நேரத்துல ‘மாலினி ஐயர்’ அப்படிங்கற சூப்பர் டூப்பர் சீரியல்ல நடிச்சிருப்பாங்க. பஞ்சாபிக் குடும்பத்துல கல்யாணம் ஆகிப்போற ஒரு தமிழப்பொண்ணோட கதை தான் மாலினி ஐயரோட கரு. 2012-ல வந்த ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ல ஸ்ரீதேவியோட நடிப்பை 90-ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸும் ரசிச்சாங்க. இதுக்கு அப்புறம் ஸ்ரீதேவி, மகள்களோட ஃபேஷன் உலகத்திலேயே காலடி எடுத்து வச்சாங்க. வயசானாலும் ஸ்ரீதேவியோட இளமையும் குழந்தைத்தனமான முகமும் மாறவே இல்லைன்னு மொத்த திரையுலகமும் மறுபடியும் ஸ்ரீயை கொண்டாட ஆரம்பிச்சுது.
”குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரா நடக்கிற வன்முறைகளை என்னால தாங்கவே முடியாது. அந்த மாதிரி நியூஸை பார்த்துட்டா அன்னிக்கு நைட் என்னால தூங்கவே முடியாது’’ன்னு ஒரு பேட்டியில சொன்ன ஸ்ரீதேவியோட கடைசி படம் ‘மாம்’. மகளை பாலியல் வன்கொடுமை செஞ்சவங்களை பழிவாங்குற அம்மா கேரக்டர் இதுல ஸ்ரீதேவிக்கு. இது ஸ்ரீதேவியோட 300-வது படம். இது 2017-ல வெளிவந்துச்சு. அந்த வருஷம்தான் ஸ்ரீதேவியோட நடிப்புக்கு பொன் விழா ஆண்டு. ஃபிலிம்பேர் விருதுகள்ல ஆரம்பிச்சு, தமிழ்நாடு மற்றும் கேரள அரசோட சிறந்த நடிகைக்காக விருது, ஆந்திர அரசோட நந்தி விருது, 2013-ல பத்மஸ்ரீ விருதுன்னு, ஸ்ரீதேவி வாங்கின விருதுகளோட பட்டியலும் ரொம்ப நீளம்.

ஸ்ரீதேவி சொன்ன ரெண்டு விஷயங்களைப்பத்தி சொல்லிட்டு இந்தக் கட்டுரையை முடிச்சா நிறைவா இருக்கும். ஒண்ணு, ”எந்த கேரக்டரா இருந்தாலும் நடிப்புங்கிறது மனசுல இருந்து வரணும்.” ரெண்டு, ”தமிழ்ல நான் பண்ண மாதிரி கேரக்டர் வேற எந்த மொழியிலும் எனக்குக் கிடைக்கல.”
மகிழ்ச்சி மயில்!
(நாயகிகள் வருவார்கள்)