விசிக எம்.பி ரவிக்குமார், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரவர் தொகுதிகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும்.
மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களே வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வரிசையில் இதே கோரிக்கையை முன்வைத்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், இந்த கோரிக்கையை மறுக்க தமிழக அரசுக்கு இருக்கும் நியாயமான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டுகிறோம் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இது குறித்து தனது முகநூல் பதிவில் சு. வெங்கடேசன், “தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற அரசின் சார்பில் அலுவலகம் கட்டித்தரப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுந்தான் அலுவலகம் வழங்கப்படவில்லை.
இது சம்பந்தமாக மாநில அரசின் கவனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கொண்டு சென்றாகிவிட்டது. மாநில வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்கள் இப்பிரச்சனையை எழுப்பினார்.
உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று பதில் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசு அலுவலங்களைப் பெறுவதற்கு அந்தந்த மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் தயவில் தான் வாடகை கட்டிடம் பெற வேண்டிய நிலையில் எம்.பி-க்கள் உள்ளனர்.
எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் பணிகளை நிறைவேற்ற அலுவலகம் தாருங்கள் என்று கேட்கிறோம்.
கேரளா உள்ளிட்ட அருகாமை மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை மேற்கோள் காட்டியும் கேட்டாகிவிட்டது.
17-வது நாடாளுமன்றம் முடிவடைந்து 18-வது நாடாளுமன்றத்தின் ஓராண்டும் முடிவடைந்து விட்டது.
இந்த கோரிக்கையை மறுக்க தமிழக அரசுக்கு இருக்கும் நியாயமான காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.