
‘முக்கிய மெசேஜ்!’
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்று திடீரென பனையூரிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பறந்திருக்கிறது.
அதாவது, மாநாடு சம்பந்தமாக நிர்வாகிகள் அடிக்கும் பேனர்களிலும் போஸ்டர்களிலும் ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!’ என்ற வாக்கியம் தவறாமல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு அறிவுரை தலைமையிடமிருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் சென்றிருக்கிறது. தலைமையிடமிருந்து வந்திருக்கும் இந்த முக்கிய மெசேஜை மாவட்டச் செயலாளர்கள் தங்களின் மாவட்டத்துக்குள் வரும் நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் பாஸ் செய்து வருகின்றனர்.
‘NDA க்குள் இழுக்க முயற்சி!’
இப்போதைய அரசியல் சூழலில் தவெக நிர்வாகிகளுக்கு பனையூரிலிருந்து பாஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த மெசேஜ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், விஜய்யை NDA கூட்டணிக்குள் இழுக்க பாஜகவும் அதிமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜகதான் எதிரி என விஜய் கூறிய பிறகும் அமித் ஷா விஜய் மீது விமர்சனம் வைப்பதே இல்லை. ‘ஒரு பிரமாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு சரியான நேரத்தில் வரும்.’ என எடப்பாடி பேசி வருகிறார். விஜய்யுடன் கூட்டணி பேசுகிறீர்களா என்பதற்கு ‘தேர்தல் வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது.’ என்கிறார்.

‘தவெக ப்ளான்!’
இப்படியொரு நிலையில்தான் நேற்று பனையூரில் ஆனந்த் மற்றும் ஆத்வ் அர்ஜூனா தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!’ என்ற வாசகத்தை போஸ்டர்களிலும் பேனர்களிலும் பயன்படுத்துமாறு கூறப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜானும் பங்கேற்றிருக்கிறார்.
பாஜக-வை கொள்கை எதிரி என அறிவித்துவிட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் யாருடனும் சேரமாட்டோம் என்பதுதான் தவெகவின் முடிவு. இதனால்தான் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதைத் தொடர்ந்துதான் மாநாட்டு அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
ஆகஸ்ட்டில் மதுரையில் மாநாட்டை முடித்துவிட்டு செப்டம்பரில் சுற்றுப்பயணத்தையும் விஜய் தொடங்கவிருக்கிறார். ஆக, மாநாட்டின் மைய தீம் ஆகவே விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்துவதுதான் இருக்கப்போகிறது என்கின்றனர் விவரமறிந்த பனையூர் வட்டாரத்தினர்.

விஜய்யை மாநாட்டில் உறுதியாக முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்துவதன் மூலம் விஜய்யை தொடர்ந்து கூட்டணிக்கு அழைக்கும் அதிமுக, பாஜக தலைகளுக்கு செக் வைக்கலாம் என்று நினைக்கின்றனர்.
மேலும், சுற்றுப்பயணத்தையும் விஜய்யை மட்டுமே மையப்படுத்தி அவரின் இமேஜை மட்டுமே பிரதானப்படுத்தி ஸ்டாலின் vs விஜய், திமுக vs தவெக என்கிற கதையாடலை உருவாக்கவும், மாநாட்டில் செட் செய்யப்போகும் அந்த தீமே உதவும் என்றும் கணக்குப் போடுகின்றனர்.