• July 20, 2025
  • NewsEditor
  • 0

அணியில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நிர்வாகி ஒருவர் ‘வருங்கால துணை முதல்வரே…’ என அழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயினார் நாகேந்திரன்

அதிமுக – பாஜக கூட்டணி உருவான நாளிலிருந்தே ‘கூட்டணி ஆட்சி’ என்கிற விவகாரம் சர்ச்சையாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. எடப்பாடியின் கையை உயர்த்தி அமித் ஷா கூட்டணியை அறிவித்த சமயத்திலேயே, ‘2026 இல் NDA கூட்டணியே ஆட்சி அமைக்கும்.’ என்றார்.

அப்போது, ‘அமித் ஷா சொன்னதை ஊடகங்கள் தவறாக புரிந்துக்கொண்டு விட்டன. NDA கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றே அமித் ஷா பேசினார்.’ என அமித் ஷாவின் பேச்சுக்கு கமா போட்டு புதிய பொழிப்புரை கொடுத்தார் எடப்பாடி. ஆனால், அமித் ஷா அதன்பிறகும் அமைதியாகவில்லை. தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி நாளிதழ்களுக்கு பேட்டி கொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா, அண்ணாமலை

அவற்றில், ‘NDA கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக அங்கம் வகிக்கும்.’ என அழுத்தம் திருத்தமாக மீண்டும் கூறினார். எடப்பாடி உஷாரானார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், ‘அதிமுக தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியமைக்கும்.’ என்றார்.

அப்போதும் பாஜக முகாம் சைலண்ட் ஆகவில்லை. ‘கூட்டணி விஷயத்தில் அமித்ஷா சொல்வதே வேதவாக்கு.’ என எல்.முருகன் திரியை கொளுத்த, ‘அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி என்கிற முழக்கத்தை பேசவில்லையெனில் நான் அவரின் தொண்டனாகவே இருக்க முடியாது.’ என அண்ணாமலை எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினார்.

இந்நிலையில்தான், திருத்துறைப்பூண்டியில் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி, ‘கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.’ என கறாரான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

அரியலூர் கூட்டம்
அரியலூர் கூட்டம்

‘கூட்டணி ஆட்சி’ என்கிற விவகாரம் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் புயலை கிளப்பியிருக்கும் சூழலில்தான், அரியலூர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ‘வருங்கால துணை முதல்வரே…’ என பெண் நிர்வாகி ஒருவர் நயினார் நாகேந்திரனை விளிக்கிறார். பதறிப்போன நயினார் நாகேந்திரன், ‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது…’ என உடனடியாக மறுப்பும் தெரிவிக்கிறார்

‘கூட்டணி ஆட்சி’ என்கிற சர்ச்சை அதிமுக பாஜக கூட்டணித் தலைவர்களை கடந்து தொண்டர்கள் வரைக்குமே சென்று சேர்ந்திருக்கிறது. மேடையில் அந்த பெண் நிர்வாகி பேசுகையில் கீழே இருக்கும் நிர்வாகிகள்தான் அண்ணனை வருங்கால துணை முதல்வர் என கூறுங்கள் என்று பாய்ண்ட் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

அமித் ஷாவின் அடுத்தடுத்த பேட்டிகள் பாஜக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அடுத்து கூட்டணி ஆட்சிதான் என்கிற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. எடப்பாடியின் எதிர்வினைகள் அதிமுக தொண்டர்களை பாஜகவின் விருப்பத்துக்கு எதிராக தூண்டுகிறது. எதிர் – எதிர் முனைகளில் நின்று கொண்டு இந்தக் கூட்டணி சாதிக்குமா? உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *