
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி மிக இக்கட்டான சூழலில் சிக்கும்போதெல்லாம் தனியாளாகப் போட்டியை வென்று தரக்கூடிய நட்சத்திர பவுலராக பும்ரா திகழ்கிறார்.
ஆனால், அதுவே அவரது ஃபிட்னஸ் மீதான அழுத்தமாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்கள் வீசியதால் காயத்துக்குள்ளானார் பும்ரா.
அதனால், சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் விளையாட முடியாமல் போனது. இருப்பினும், பும்ரா இல்லாமலேயே சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது.
அதைத்தொடர்ந்து ஐ.பி.எல்லிலும் முதல் சில போட்டிகளில் ஆட முடியவில்லை. தற்போது நடந்துகொண்டிருக்கும் இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு காயம் ஏதுவும் ஏற்படக் கூடாது என மூன்று போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் தீர்மானித்துவிட்டது.
அதன்படி, முதல் போட்டியில் களமிறக்கப்பட்ட பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கூடவே பேட்டிங்கில் இந்திய அணியில் 5 சதங்களும் பதிவானது. ஆனாலும், அப்போட்டியில் இந்தியா தோற்றது.
பின்னர் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்ட இரண்டாவது போட்டியில், ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் இந்தியா வென்றது.
அதைத்தொடர்ந்து லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் களமிறங்கிய பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார். ஆனால், இங்கிலாந்து வெற்றிபெற்றது.
நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

ஏற்கெனவே இந்திய அணி நிர்வாகம் அறிவித்தபடி இந்தத் தொடரில் இன்னும் ஒரு போட்டியில்தான் பும்ரா விளையாடுவார் என்பதால், அடுத்த போட்டியில் அவர் களமிறக்கப்படுவாரா என்று கேள்வியெழுந்திருக்கிறது.
இந்நிலையில், பும்ரா விளையாடுகிறாரா இல்லையா என்பது முக்கியமான விஷயமல்ல என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரெக் சேப்பல் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தின் வலைத்தளப் பக்கத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி குறித்துக் கட்டுரை எழுதியிருக்கும் கிரெக் சேப்பல், “பும்ரா விளையாடுகிறாரா இல்லையா என்பது முக்கியமான விஷயமல்ல.
இந்திய அணி சமீபத்தில் அவர் இல்லாமலேயே நிறையப் போட்டிகளில் வென்றிருக்கிறது.
எனவே, இங்கு முக்கியமானது தனியொருவரின் ஆட்டம் அல்ல, ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிதான்.
எல்லா வீரர்களும் தங்களின் வேலையைச் செய்யும்போது அணி வெற்றிபெறுகிறது.

ஒவ்வொரு வீரரையும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும், கேம் பிளானுக்குத் தயாராகவும் இருப்பதை கேப்டன் உறுதிசெய்வதுதான் அதற்கான ஃபார்முலா.
இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. இப்போது 25 வயது கேப்டன் சுப்மன் கில் மீது கவனம் திரும்பியிருக்கிறது.
பேட்டிங் மற்றும் தலைமைப் பண்புகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனால், இந்தத் தருணம்தான் ஒரு டெஸ்ட் கேப்டனாக அவரது பாதையை வரையறுக்கும்.
இருப்பினும் அது எளிதல்ல. இந்தியா எந்த மாதிரியான அணியாக இருக்க வேண்டும் என்று கில் வரையறுக்க வேண்டும்.
ஒரு கேப்டன் வெறும் சொற்களால் அல்லாமல், தனது செயல்கள் மற்றும் தெளிவான நோக்கத்தால் அணியைக் கட்டமைக்கிறார்.” என்று எழுதியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…