
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏழை தொழிலாளிகளைக் குறிவைத்து சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கிட்னியை விற்பதாகப் புகார் எழுந்தது.
இதனடிப்படையில் நாமக்கல் மாவட்டச் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் இரண்டு நாட்களாக பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையில், புரோக்கர் ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் புரோக்கர் ஆனந்தன் வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, வீடு பூட்டி இருந்தது.
இதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார். மேலும், பலர் புரோக்கர்களாகச் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் பணத் தேவை உள்ள கூலி தொழிலாளர்களை ஆசை வார்த்தை காட்டி கிட்னி தானம் செய்தால் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.
மேலும் கிட்னி கொடுத்ததாகக் கூறப்படுபவர்கள், புரோக்கர்களாகச் செயல்பட்டு தங்களது உறவினர்களுக்கும் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பள்ளிபாளையம் அரசு மருத்துவர் வீரமணி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார். அதில், “பள்ளிபாளையம் பகுதியில் பெண்களை ஏமாற்றி கிட்னியை எடுப்பதாக சமூக வலைத்தளங்களில் புகார் கிளம்பியுள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத்துறையினர் கிட்னியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், “குடும்பத் தேவைக்காக மகளிர் குழுக்களில் கடன் வாங்கினோம். வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் போதாததால் குழு கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி குழு கடனைச் செலுத்தினோம்.
கடன் சுமை அதிகமாகி விட்டதால் வேறு வழி இல்லாமல் கிட்னி விற்றேன். இதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். அதைப் பெற்று வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தி உள்ளேன். எனது கணவரும் கிட்னி கொடுத்துள்ளார்” என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் யாரெல்லாம் கிட்னி விற்பனை செய்தது, புரோக்கராகச் செயல்பட்ட ஆனந்தன் எங்குத் தலைமறைவாக உள்ளார் என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.