
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று தொடங்கியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நன்கு தெரியும். அவரிடம் முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரைந்து விட்டது. இருக்கும் இடமே தெரியவில்லை என்கிறார். மறுபக்கம் எங்களுக்கு ரத்தின கம்பளம் விரிப்போம் எனக் கூட்டணிக்கு அழைக்கிறார். அவரின் அழைப்பை நாங்கள் நிராகரித்துவிட்டோம்.
எடப்பாடி பழனிசாமி பாஜகவுடைய அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறாரா? தேர்தல் ஜனநாயக முறைக்கு பாஜக அவநம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளை 40 என்கிற எண்ணிக்கையிலிருந்து, 8 தொகுதிகளைக் குறைக்க மத்திய அரசு முயல்கிறது.

பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு இயற்கை பேரிடர் உள்ளிட்ட எதற்கும் மத்திய அரசு உரிய நிதி கொடுப்பதில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?
பாஜக ஆட்சியை 13 மாதங்களில் கவிழ்த்தவர் ஜெயலலிதா. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது பாஜக சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி, அவர்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்திட்டார்.
அரசியல் ரீதியான கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்த முறையில் பேசுகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்கிறார். நானும் ரவுடி தான். நானும் ரவுடி தான் என்கிற வடிவேலு காமெடி போல எடப்பாடி பழனிசாமி நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறுகிறார். அதிமுக பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி நம்பகமான தலைவர் இல்லை. அவருடன் கூட்டணி சேர்வதற்கு யாரும் தயாராக இல்லை. எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற எடப்பாடி பழனிசாமி, ஏதேதோ பேசி திசை திருப்புகிறார். எங்கள் அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணி, தெம்பு இருந்தால், முதுகெலும்பு இருந்தால் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும்.

அதிமுக என்ற திராவிட கட்சி அழிவுப் பாதையில் உள்ளது. அவர்களாக பாழும் கிணற்றில் விழுந்துள்ளனர். அந்தக் கிணற்றில் எங்களையும் இழுக்கப் பார்க்கிறார். எடப்பாடி பழனிசாமியை நம்பிய சசிகலா, ஓபிஎஸ் கதி என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.