• July 19, 2025
  • NewsEditor
  • 0

கடந்த வாரம் சமூக வலைத்தளங்களை ரொம்பவே ஆக்கிரமித்திருந்த ஒரு செய்தி நடிகர் கிங்காங் மகள் திருமணம். நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்ட அந்தத் திருமணத்தின் ஹைலைட் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதுதான்.

காரணம், கிங்காங் அதிமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர். கல்யாணத்தை நடத்தி முடித்த களைப்பு மறைவதற்குள் அடுத்த பட ஷூட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கி விட்ட கிங்காங்கிடம் பேசினோம்.

நடிகர் கிங்காங் மகள் திருமணம்

“‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’னு சொல்வாங்க இல்லையா சார், அதை இப்பதான் அனுபவிச்சு உணர்ந்தேன. நாலு நாளா ஊரெல்லாம் நம்ம வீட்டுக் கல்யாணம் பத்தின பேச்சுதான்.

ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அதேநேரம் ‘எதுக்கு எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்கணும்’, ‘மொய் வரும்னு இப்படி செய்றார்’ங்கிற சில கமென்டுகளையும் பார்த்தப்ப ரொம்ப சங்கடமா இருந்தது.

மொத்தம் 1250 பத்திரிக்கை வச்சேன். பத்திரிக்கை வைக்கணும்னு முடிவு செஞ்சப்பவே அரசியல் தாண்டி ஒரு நடிகனா என்னை ரசிச்சு ஆதரவு தந்த எல்லாரையுமே கூப்பிடலாம்னுதான் முடிவு செஞ்சேன். அதனாலதான் தெரிஞ்ச எல்லா கட்சிக்காரர்கள், தொழிலதிபர்கள்னு லிஸ்ட் எடுத்தேன்.

தெரிஞ்சவங்களுக்குத்தானேங்க பத்திரிக்கை வச்சேன்?

அதிமுகவுல நான் நட்சத்திரப் பேச்சாளர் அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்களூக்கு வச்சேன். பா.ம.க-வுல அன்புமணி ஐயாவுக்கு வச்சேன். அவருக்கு அழைப்பிதழ் தரப் போறப்ப பழங்கள் வாங்கிட்டுப் போகலாம்னு நினைச்சேன்.

மாம்பழ சீசன்கிறதால அதையே வாங்கினேன். ஆனா அவருடைய கட்சி சின்னம் மாம்பழம்கிறதால நான் அதை வாங்கிட்டுப் போனேன்னு நினைச்சு அவங்க கட்சிக்காரங்க அழைப்பிதழ் வச்ச வீடியோவை ட்ரென்ட் ஆக்கி விட்டுட்டாங்க‌.

வீடியோ வைரலாக ‘இது கூட நல்லா இருக்கே’னு பத்திரிக்கை வைக்கறதையே ஒரு கொண்டாட்டமா ஆக்கிட்டேன். மத்தபடி திட்டமிட்டெல்லாம் எதையும் செய்யலங்க” என்றவரிடம்

முதல்வரின் வருகை குறித்துக் கேட்டோம்.

டி.ராஜேந்திரன், கிங்காங்
டி.ராஜேந்திரன், கிங்காங்

”முதலமைச்சருக்குப் பத்திரிக்கை வைக்கலாமானு யோசிச்சப்ப லேசான தயக்கம் இருந்தது. நான் எதிர்க்கட்சியில இருக்கேனேங்கிற அந்த ஒரு காரணம்தான். ஆனா பூச்சி முருகன் அண்ணந்தான் ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போனார்.

அறிவாலயத்துல போய் பத்திரிக்கை வச்சதும் நேரம், தேதியையெல்லாம் பார்த்துக்கிட்டவர், ‘பார்க்குறேன்’னு மட்டும் சொன்னார்

அடுத்தடுத்த வேலைகள்ல நானும் பிசியாகிட்டேன். கல்யாணத்து அன்னைக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடிதான் ‘சி.எம். வர்றாங்க’னு எனக்குச் சொன்னாங்க.

நம்பவே முடியலை. என்ன செய்யறதுனு தெரியல. கையும் ஓடலை, காலும் ஓடலை. அதேபோல சரியா அடுத்த ரெண்டு மணி நேரத்துல வந்துட்டார்.

அதுவும் அன்னைக்கு எங்கேயோ வெளியூர்ல இருந்து வந்த சில மணி நேரத்துல வந்திருக்கார். என் வாழ்க்கையில இது பெரிய விஷயம் சார்.

பதட்டத்துல அவர்கிட்ட என்ன பேசறதுன்னு கூட தெரியலை. ‘ரொம்ப நன்றிங்க சார்’னு மட்டும் திரும்பத் திரும்ப சொன்னேன். மணமக்களை வாழ்த்திட்டுக் கிளம்பிட்டார்.

பூச்சி முருகன்

மறுநாள் பாத்தீங்கன்னா முதல்வர் வந்துட்டார் எடப்பாடியார் வரலைனு சிலர் கிளப்பி விட்டுட்டாங்க. நான் அதிமுக-வைச் சேர்ந்தவந்தான்னாலும் நல்லது பொல்லதுகள்ல பொதுவான சினிமா கலைஞனாக இருந்துட்டுப் போவோமேனு நினைக்கிறவன்.

எதுக்கு இப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்கனு தெரியலை. பழனிச்சாமி ஐயா வாழ்த்து மடல் அனுப்பி வச்சிருந்தார். ஜெயக்குமார் சார் நேர்ல வந்தார்.

மொத்தத்துல என் மனசு குளிர நிறையப் பேர் வந்து மணமக்களை வாழ்த்தினாங்க.

அதேபோல என் சொந்த கிராமத்துக்கு ஒரு பஸ் அனுப்பிட்டேன். அங்க இருந்து சொந்த பந்தம் அக்கம் பக்கதினர் எல்லாம் வந்து போனாங்க’ என நெகிழ்வுடன் முடித்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *