
கும்பகோணம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு கோயிலுக்குள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் பிறந்த ஜென்ம நட்சத்திரமான ஆடி திருவாதிரை நாள், 2022-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு ஆடிதிருவாதிரை விழாவை கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி கொண்டாட அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை நிகழாண்டு இந்திய கலாச்சார துறை சார்பில் ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.