
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றியுள்ளது அந்த மாநில பாஜக அரசு. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாளான நேற்று (18.07.2025) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று உணவு மற்றும் சிவில் விநியோக அமைச்சர் சகன் புஜ்பால் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரவை முடிவு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
“பெயர்களை மாற்றும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மாநில அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவதன் மூலம் தனது பங்களிப்பை நிறைவேற்றியிருக்கிறது.” எனத் தெரிவித்தார் சகன் புஜ்பால்.
மகாராஷ்டிராவில் செயல்படும் இந்துத்துவ அமைப்பான சிவபிரதிஸ்தானைச் சேர்ந்தவர்கள் சங்கிலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இஸ்லாம்பூரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்ற கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து இந்த கோரிக்கை நிறைவேறும் வரை ஓயாமல் போராடுவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாம்பூரின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை 1986-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பதாக சிவசேனா கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.