
நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
ஜூலை தொடக்கத்திலும் பரவலாக கனமழை நீடித்தாலும், அதன்பிறகு மழையின் தீவிரம் சற்றுக் குறைந்தே காணப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் மழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக அனைத்து அணைகளும் ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பெரும்பாலான அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையும் காற்றின் தீவிரம் குறையாமல் இருப்பதால் மரங்கள் விழும் அபாயம் தொடர்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அவலாஞ்சி, பைன் ஃபாரஸ்ட், 8 – வது மைல் ட்ரீ பார்க் போன்ற சுற்றுலாத்தலங்களை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம் குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், “நீலகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பார்சன்ஸ் வேலியில் 35 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஒருசில பகுதிகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மழை அதிகரிக்கும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன” என்றனர்.