
சென்னை: “தமிழக மக்கள் மீது தமிழக அரசு நிறுவனம் மூலம் இந்தியை திணிக்க முயன்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,” சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அசோக் நகர் என்ற பெயர் மட்டும் இந்தியிலும் எழுதப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அசோக் நகர் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் இந்த நவீன இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் இந்தி எழுத்துகளை மட்டும் வெள்ளைக் காகிதத்தை ஒட்டி மறைத்திருக்கிறது. இந்த நவீன இந்தித் திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது.