
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.
கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு பிறந்தவர் மு.க.முத்து. 1970-ல் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய மு.க முத்து ‘பூக்காரி’, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’, ’இங்கும் மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்ட இவர் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பாடல்களைப் பாடியும் அசத்தி இருக்கிறார். ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும். கடைசியாக 2008-ம் ஆண்டு இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘மாட்டுத்தாவணி’ படத்தில் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் மு.க முத்து நடித்த பெரும்பாலானப் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன. 1970-களின் முற்பகுதியில் முத்து தனது அரசியல் வாரிசாக வேண்டும் என்று கருணாநிதி ஆரம்பத்தில் விரும்பி இருக்கிறார்.
பின்னர் அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு எதிராக அவரை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் மு.க முத்து அரசியலிலும் ஈடுபட்டு இருக்கிறார். மு.க.முத்துவுக்கு சிவகாம சுந்தரி என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் பிறந்தனர். கருணாநிதியுடனான மனக்கசப்பு காரணமாக அரசியலில் இருந்தும் விலகிக் கொண்டு தனியாக வசித்து வந்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்திருக்கிறார். அவரின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மூத்த நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுகவினரும், திரையுலகினரும் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…