
சென்னை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி சொல்லாததால் சிஎம்டிஏ உறுப்பினர் செயலரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானதால் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரத்தினசபாபதி என்பவர், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக சென்னை 19-வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியம் அளிக்க வேண்டுமென நீதிமன்றம் சம்மன் பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த சம்மனை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் வாங்க மறுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.