
வளரும் நாடுகள் கூட்டமைப்பான BRICS-ல் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இந்த குழு ஏதேனும் திட்டத்துடன் மீண்டும் உருவானால் உடனடியாக கலைக்கப்படும் என்றும் பேசியிருக்கிறார்.
அமெரிக்க எதிர்ப்பு கொள்கை!
“நான் இந்த பிரிக்ஸ் பற்றி கேட்கும்போது, அடிப்படையில் ஆறு நாடுகள், அவர்களை மிகவும் கடுமையாக தாக்கினேன். அவர்க உண்மையில் அர்த்தமுள்ள வகையில் உருவானால், அது விரைவில் முடிவடையும்” என நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் எச்சரித்தார் ட்ரம்ப். “நம்முடன் யாரும் விளையாட அனுமதிக்கக் கூடாது” என்றார்.
மேலும் ட்ரம்ப், அமெரிக்க டாலர்கள் உலகின் இருப்பு நாணயமாக செயல்படுவதைக் காப்பார் என்றும், அமெரிக்க மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க-எதிர்ப்பு கொள்கைகளுடன் இணையும் எந்தவொரு நாட்டுக்கும் ஜூலை 6-ம் தேதி அறிவித்த புதிய வரி பொருந்தும் என அறிவித்தார் ட்ரம்ப்.
ட்ரம்ப் – பிரிக்ஸ் மோதல்!
உலகளாவிய முக்கிய பொருளாதார மன்றங்களாக இருக்கும் ஜி7, ஜி20 போன்றவை நாடுகளுக்கு இடையிலான முரண்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் அமெரிக்க அதிபரின் ‘அமெரிக்கா முதலில்’ கொள்கையால் சீர்குலைந்து வருகிறது. இந்த நிலையில், பலதரப்பு ராஜாந்திர நடவடிக்கைகளை விரும்பும் நாடுகளுக்கான புகலிடமாக தன்னைக் காட்டிக்கொள்கிறது பிரிக்ஸ் அமைப்பு.
ட்ரம்ப் பிரிக்ஸ் அமைப்பு உலகின் இருப்பு நாணயமாக டாலரின் இடத்தை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால் பிரிக்ஸ், தாங்கள் அமெரிக்கா எதிர்ப்பாளர்கள் இல்லை எனக் கூறிவருகிறது.
பிரிக்ஸ் நாடுகள் இடையே ஒரு பொதுவான கரன்சியை பயன்படுத்தும் முயற்சிகளைக் கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் கைவிட்டது. அதைத்தொடர்ந்து உள்ளூர் நாணயங்களில் நிதிப்பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், வர்த்தகங்களுக்கு உதவும் வகையிலும் ‘பிரிக்ஸ் பே’ என்ற எல்லை தாண்டிய கட்டண முறையை உருவாக்க அந்த அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
BRICS பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கடந்து தன்னை விரிவுபடுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஈரான் மற்றும் இந்தோனேசியா நாடுகள் இதில் இணைந்தன.

பிரேசிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் இராணுவ மற்றும் வர்த்தக கொள்கைகளை மறைமுகமாக விமர்சித்தனர்.
பிரிக்ஸ் நாடுகளில் பிரேசிலை மட்டும் குறிவைத்து ட்ரம்ப் 50% வரி விதித்துள்ளார். இது ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும். மேலும் அமெரிக்கா நியாயமற்றதாகக் கருதும் பிரேசிலின் வர்த்தக கொள்கைகள் மீது விசாரணை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.