• July 19, 2025
  • NewsEditor
  • 0

ஃபைனலி யூடியூப் சேனல் மூலம் நமக்கு பரிச்சயமான சதீஷ்குமார் ‘3 BHK’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தனது நடிப்பு பயணம் மற்றும் அனுபவங்கள் குறித்து சதீஷ்குமாரோடு உரையாடியதிலிருந்து…

“3 BHK திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. படத்தைப் பத்தி மக்கள் என்னென்ன சொல்றாங்க?”

பெரும்பாலும் மக்கள் படத்தை நல்லாவே கொண்டாடுறாங்க. வீடு மற்றும் கனவு தொடர்பான கதையா இருந்தாலும் கூட, ஒரு நடுத்தரக் குடும்பத்தோட வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற மாதிரிதான் படத்தோட கதை இருக்கு. அதனால மக்கள் நல்லா பாசிடிவான விமர்சனங்களைத் தான் கொடுக்குறாங்க. என்ன மாதிரி ஒரு புது நபர் படத்துல நடிச்சிருக்கேன்னு பார்க்காம, படத்துல எனக்குத் தந்த கேரக்டரை நான் எப்படி பண்ணியிருக்கேன்னு பார்த்து குறிப்பிட்டு நிறைய பேர் பாராட்டியிருந்தாங்க. அதெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.

3 BHK - Sathish Interview
3 BHK – Sathish Interview

“படம் ரிலீஸுக்குப் பிறகான நிகழ்வுகள்ல உங்களைப் பார்க்கவே முடியலையே!”

ஆடியோ லாஞ்ச் விழாவுக்கு வந்திருந்தேன். தேங்ஸ் மீட் நடந்தபோது நான் ஊர்ல இருந்தேன். படம் ரிலீஸ் ஆனப்போ எனக்கு இரண்டு நாள் ஷூட் இருந்தது. ஷூட் முடிச்சுட்டு, படத்தைக் குடும்பத்தோட பார்க்கலாம்னு இருந்தேன். நான் இப்படியொரு படம் பண்றேன், சினிமாவுல நடிக்கிறேன்னு வீட்ல யாருகிட்டயும் அதுவரை சொல்லல. ஊருக்குப் போனதும், ‘கிளம்புங்க, வெளிய போகணும்’னு வீட்ல சொன்னேன். சகோதரி திருமணமானவங்க, அவங்களையும் கால் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தேன். வீட்டுக்கு வந்த உடனே பரபரப்பா கிளம்பச் சொன்னதைப் பார்த்து அம்மா அப்பா எல்லாம் ரொம்ப பயப்பட ஆரம்பிச்சாங்க. சகோதரி வேற ஊர்லயிருந்து வந்திருக்காங்க. ‘என்ன ஆச்சு’னு எல்லாரும் சிந்தனையில இருந்தாங்க. நான், ‘கிளம்புங்க, ஒரு இடத்துக்கு போகணும்’னு கொஞ்சம் சீரியஸாதான் சொன்னேன். எல்லாருக்கும் விஷயம் தெரியாததால, ‘பையன் ஏதோவொரு பொண்ணை லவ் பண்ணிருப்பான் போல. அவங்க வீட்ல ஏதோ பிரச்சினைனு நம்மளக் கூட்டிட்டு போறான் போல’னு கற்பனையில நல்ல டிப் டாப்பா கிளம்பி வந்தாங்க.

11 மணி ஷோவுக்கு 10.30 மணிக்கு வீட்ல இருந்து கிளம்பி போனோம். ‘எங்கயோ வெளிய போகணும்னு சொல்லிட்டு தியேட்டருக்கு கூட்டிட்டு வந்துருக்கான்’னு கேட்டாங்க. ‘படம் நல்லா இருக்கும்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டு போலாம்’னு சொன்னேன்.

‘சரி’னு சொல்லிட்டு எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து படம் பார்த்தோம். படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் அப்புறம்தான் நம்ம கேரக்டர் வரும். குடும்பத்தினர் எல்லாரும் அதுவரை படத்தை நார்மலா பாத்துட்டு இருந்தாங்க. நம்ம கேரக்டர் வந்த அப்புறம், ‘ஏய், ஏய், இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தியா’னு ரொம்ப ஹாப்பியாகிட்டாங்க. இன்டர்வல் வந்த உடனே எல்லாரும் கட்டிப்பிடிச்சு அழுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாங்க.

தியேட்டருக்கு வந்த எல்லாரும், ‘என்ன, இப்படி அழுதுட்டு இருக்காங்க’னு எட்டிப்பார்க்க வந்தாங்க. அப்புறம் நான் தான்னு பார்த்துட்டு, படத்துல நடிச்சிருந்ததை வச்சு அடையாளப்படுத்திப் பேசினாங்க. ‘நம்ம ஊர்ல இருந்து ஒரு பையன் அங்க வரை போயிருக்கான்’னு மகிழ்ச்சியானாங்க.

சிலர், ‘சினிமாக்காரங்க சென்னையில மட்டும்தான் இருப்பாங்க’னு நினைச்சுட்டு, ‘நீங்க என்ன இங்க இருக்கீங்க’னு கேட்டாங்க. ‘நம்ம ஊரு தியேட்டருக்கு வராம எப்படி’னு சொன்னேன். அந்த அனுபவமெல்லாம் நல்லா இருந்தது.

“கிளைமாக்ஸ்ல வர்ற தருணத்தை நீங்க கிட்டத்தட்ட இன்டர்வல்லே உருவாக்கிட்டீங்க. எமோஷனல்லா என்ன வார்த்தைகள் சொன்னாங்க அப்பாவும் அம்மாவும்?”

படத்துல சொல்ல வார்த்தையில்லாம கண்ணீரோட பேசுற மாதிரிதான் இங்கயும் நிலைமை போச்சு. ஸ்க்ரீன்லயும் நேர்லயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மொமண்ட்தான். யாரும் பெருசா வார்த்தைகள் வெளிப்படுத்தல. கட்டிப்பிடிச்சு கண்ணீர்லதான் வெளிப்படுத்தினாங்க. சகோதரியெல்லாம் ரொம்ப தேம்பி தேம்பி அழுதுட்டு இருந்தாங்க. ‘அழாத, படம் பாரு, எல்லாரும் பாக்குறாங்க’னு சொல்லிதான் சமாதானம் செய்ய வேண்டி இருந்தது.

வீட்டுக்கு போன அப்புறம், ‘படம் நல்லா இருந்தது, நீ எப்படி வருவியோனு நாங்க பயத்தில் இருந்தோம், நல்லா பண்ணியிருக்க’னு ஹாப்பியா பாசிடிவா சொன்னாங்க. ஒரு மூணு மாசத்துக்கு சம்பளம், காசுலாம் கேட்காதீங்கனு நான் அப்போதான் அம்மாகிட்ட சொன்னேன். ‘சரி, படம் நடிச்சதுக்கு எவ்ளோ சம்பளம் வாங்குன’னு அம்மா கேட்டாங்க. படத்துக்கு நடிக்க வாங்குன எல்லா சம்பளமும் மாசாமாசம் கொடுத்துட்டேன். அப்புறம் அடுத்தடுத்து பண்ணும்போதுதான் சம்பளம் அதிகமா வரும்னு அம்மாகிட்ட சொன்னேன். வீட்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷமானாங்க.

3 BHK - Sathish Interview
3 BHK – Sathish Interview

“3 BHK படத்துல கமிட் ஆன அப்புறம் ஷூட்டிங் முதல் நாள் முதல் ஷாட் அனுபவம் எப்படி இருந்தது?”

முதல் ஷாட் எப்படி இருந்ததுனா, 12ஆம் வகுப்பு ரிசல்ட் லோட் ஆகும்போது மனசுக்குள்ள திக் திக் மொமண்ட் இருக்கும்ல, அது மாதிரி இருந்தது. முதல் முறையா ஒரு பொண்ணுக்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டு அவங்க என்ன சொல்லுவாங்கனு மனசுல பயத்தோட இருப்போம்ல, அந்த திக் திக் தருணம் மாதிரி இருந்தது மனசு.

முன்னாடி நான் யூடியூப் சேனலுக்காக நடிக்கும்போது, கேமராமேன், டைரக்டர், ஏடி, ஆர்ட்டிஸ்ட்னு மொத்த செட்லயே பத்து பேர்தான் இருப்பாங்க. ஆனா இங்க பட ஷூட்டிங் செட்ல சராசரியா ஒரு 100, 150 பேர் இருக்காங்கனு பார்த்தது மனசுல ரொம்ப பயத்தைக் கூட்டிருச்சு. பெரிய ஸ்டார் கூட நடிக்கிறோம்னு மனசுல படபடனு இருந்தது. ஆனா, எல்லாத்தையும் ஸ்ரீ அண்ணாவும் சித்தார்த் சாரும் ரொம்ப அழகா ஹாண்டில் பண்ணி என்னைக் கம்ஃபோர்டபிளா வச்சுக்கிட்டாங்க. அது ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்தது.

ப்ரொடியூசர் அருண் விஷ்வா அண்ணன், ‘நீங்க தைரியமா பதட்டப்படாம பண்ணுங்க, எதுனாலும் கேளுங்க’னு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாரு. கூடப் பிறந்த தம்பி மாதிரி பார்த்துக்கிட்டாரு. அப்படியெல்லாம் பண்ணும்போது, இது ஏதோவொரு இடம் மாதிரி இல்ல. நம்ம அண்ணா படம் பண்றாரு, நம்ம அண்ணா நடிக்குறதை நம்ம அண்ணா படமா எடுக்குறாரு, நம்ம குடும்பமா ஒன்னு சேர்ந்து படம் பண்றோம்னு மனசுக்கு பாசிடிவ் ஃபீல் தந்தது. படத்துல ஃபேமிலியா பயணிக்கிற மாதிரி நாங்க செட்லயும் ஃபேமிலியாதான் பயணிச்சோம்.

3 BHK - Sathish Interview
3 BHK – Sathish Interview

“3 BHK படத்துல நீங்க பண்ணிய கேரக்டருக்கான அப்பாவித்தனம் உங்களுக்கு இயல்புலே இருக்கு. ஸ்ரீ கணேஷ் சாருக்கு நீங்க பெர்ஃபெக்ட்டா கிடைச்சுட்டீங்கனு சொல்லலாம். உங்களைச் செலக்ட் பண்ண அப்புறம் அவரு என்னென்ன விஷயங்கள் சொன்னாரு?”

அவரு ரொம்ப கம்மியாதான் பேசுவாரு. ‘நீங்க பண்றது ஓகே, மீட்டர் மட்டும் நான் சொல்ற மாதிரி பண்ணுங்க’னு ஆடிஷன்ல சொன்னாரு. செட்லயும் ‘மீட்டர் ஏத்தி இறக்கிக்கோங்க’னு மட்டும்தான் சொன்னாரு. வேற பெரிய கரெக்ஷன்லாம் சொல்லல. அது கொஞ்சம் ஈஸியா இருந்தது.

முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *