• July 18, 2025
  • NewsEditor
  • 0

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26 முதல் பெய்துவரும் கனமழையால் பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை தெரிவித்திருக்கிறது.

பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சார சேவை, குடிநீர் சேவை என மக்களின் அத்தியாவசிய தேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமாக, ராவல்பிண்டியில் வெள்ளம் காரணமாக சாஹான் அணை உடைந்திருப்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மறுபக்கம், அரசுத் தரப்பில் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவர, மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராவல்பிண்டியில் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கி மைக்குடன் நேரலை வழங்கிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில் ஒருசிலர், துணிச்சலான பத்திரிகையாளர் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

அதேசமயம் பலரும், இப்படி ஆபத்தான முறையில் செய்தி சேகரிக்க என்ன அவசியம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தப் பத்திரிகையாளரின் செயல் குறித்து தங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள் மக்களே!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *