
கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை.
இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் சிவசாமிக்கும் இடையில் நட்பு இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில், இரண்டு பேரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிஸினஸூம் செய்து வந்துள்ளனர். இதனை மையப்படுத்தி இருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இருந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 2023 – ம் வருடம் நெடுங்கூரில் உள்ள தங்கவேலுக்குச் சொந்தமான 8.40 ஏக்கர் நிலத்தை சிவகாமி அபகரிக்க நினைத்ததாகச் சொல்லப்படுகிறது.
“அந்த சொத்தை தனதாக்கிக்கொள்ள நினைத்த சிவசாமி, தனது மனைவி நிர்மலா, கரூர் மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன், செந்தில்குமார், பூலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோரோடு சேர்ந்து போலியாக ஆவணங்கள் தயாரித்து, போலி கையெழுத்துகள் போட்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்துகொண்டார்” என்று தங்கவேலின் மனைவி முத்துலட்சுமி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், போலி ஆவணங்கள், கையெழுத்து மூலம் வயதான தம்பதியின் 8.40 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து அபகரித்துக்கொண்டதாக, பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் சிவசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி, தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
வயதான தம்பதியினரை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துகொண்டதாக, பா.ஜ.க முன்னாள் மாவட்ட நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் ‘பரபர’ பேசுபொருளாகியிருக்கிறது.