• July 18, 2025
  • NewsEditor
  • 0

“மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தான் முதலில் பேசியது..” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன்

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதித்ததில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்,

மதுரை சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், “2024 ஜூன் மாதத்தில் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து துணைமேயர் நாகராஜன் கேள்வி எழுப்பினார், தொடர்ந்து சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் மூலமும் சிபிஎம் கட்சி சார்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.

இம்முறைகேடு சம்பந்தமாக மாநகராட்சி ஆணையர் புகார் தந்துள்ளார், மாநகராட்சி ஆணையரின் கணினி பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நிர்வாகங்களின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்டது ஒரு சிலர் மட்டுமல்ல, அலுவலகம் அமைத்து வரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க கூடும், மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தமிழக அரசு மதுரை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை அறிக்கை என்ன ஆனது? பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகம் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை? விதிமுறைகளுக்கு புறம்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடைபெற்றது, ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து ஐஏஎஸ் அதிகாரி நடத்திய விசாரணை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும், மதுரை மாநகராட்சியில் ஆவணங்கள் இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு பல முறைகேடுகள் நடந்துள்ளது.

மதுரை மாநகராட்சி

‘உன் ஆட்சியில் நடந்ததை நான் கேட்க மாட்டேன், என் ஆட்சியில் நடப்பதை நீ கேட்காதே’ என அதிகாரிகள், அரசியல்வாதிகள் முறைகேடுட்டில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியில் நடந்துள்ள வரி முறைகேட்டில் உரிய நடவடிக்கை எடுப்போம் என தமிழக அரசு ஏன் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை? மாநகராட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியல் பொறுப்புகளில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அதிகாரிகள் வரி முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது.

மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சிதான் முதலில் பேசியது, அதிமுக அல்ல. விசாரணைக்கு பின்னர்தான் வரி முறைகேடு எத்தனை ஆண்டுகள் நடைபெற்றுள்ளது என தெரியவரும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *