
திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க-வைச் சேர்ந்த மலர்விழி என்பவர் உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் வேல்முருகனிடம் வேலை பார்த்த ஒருவரை, கவுன்சிலர் மலர்விழியின் மகனும், தி.மு.க வட்ட கழகச் செயலாளருமான ஆனந்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து, காவல் நிலையாயதஹில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கே.கே.நகர் எல்.ஐ.சி காலனியில் உள்ள தி.மு.க கவுன்சிலர் மலர்விழியின் வீட்டுக்குள் புகுந்து, அவரையும், அவரது கர்ப்பிணி மருமகள் உள்ளிட்டோரையும் உருட்டுக்கட்டைகளால் தாக்கியதாக தெரிகிறது.
அதோடு, தி.மு.க கவுன்சிலரின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியயதோடு, வீட்டு வாசலில் இருந்த காரையும் சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலில், காயமடைந்த கவுன்சிலர் மலர்விழி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால், தாக்குதலுக்குள்ளான தி.மு.க கவுன்சிலர் மலர்விழியின் உறவினர்கள் கே.சாத்தனூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

‘ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே பாதுகாப்பில்லை’ என்று கவுன்சிலர் மலர்விழி கண்ணீர்மல்க தெரிவித்தார். இந்நிலையில், ஒப்பந்தம் சம்பந்தமாக இருதரப்புக்கும் கமிஷன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. தி.மு.க கவுன்சிலர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து ஒப்பந்ததாரர் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.