
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் அதிகாரிகள் நான்கு ரத வீதிகளில் ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்யதேசங்களில் பிரசித்தி பெற்றதும், மகாலட்சுமியின் அம்சமாகிய ஆண்டாள் அவதரித்த புண்ணிய ஸ்தலம். இங்கு ஆண்டாள் ஜென்ம நட்சத்திரமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக வருடம் தோறும் நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடிப்பூரத் திருவிழா வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 24-ம் தேதி ஐந்து கருட சேவையும், 26-ம் தேதி சயன சேவையும் நடைபெறும். முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திருத்தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது 95 % பணிகள் முடிவுற்ற நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா தலைமையிலான அனைத்துத் துறை அதிகாரிகள் தேர் மற்றும் தேர் செல்லக்கூடிய 4 ரதவீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் மற்றும் எந்தெந்த இடங்களில் தேர் சக்கரம் பதிய வாய்ப்பு இருக்கிறதோ அந்த இடங்களில் இரும்பு பிளேட்டுகள் பதியப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற ஜூலை 22 ந் தேதி தொடங்கி ஆடி அமாவாசை 24ந் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தாணிப்பறை அடிவாரப் பகுதி மற்றும் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஒரு கி.மீ நடந்து சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். இந்த ஆய்வுப் பணியில் தற்காலிக பேருந்து நிலையம், மருத்துவ வசதி, பேருந்து வசதி, பக்தர்களுக்குத் தேவையான தங்கும் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பணியில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.