• July 18, 2025
  • NewsEditor
  • 0

“முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம், ஆனால், வயிற்றெரிச்சலால் வசைபாடக்கூடாது, அதை மக்கள் வரவேற்க மாட்டார்கள்..” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் எண்ணம் முழுக்க வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தை சுற்றியேதான் உள்ளது. அதற்கு காரணம், மக்கள் கடல் அலைபோல திரண்டு வரவேற்கிற காட்சியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்டி வைத்து ஏமாற்றியது போதாது என்று, இன்றைக்கு ஒரு துண்டு சீட்டில் 46 சேவைகள் என அச்சடித்து யாரை ஏமாற்றுவதற்கு புறப்பட்டிருக்கிறீர்கள்? இந்த நான்கு மாதத்தில் உங்களால் செய்ய முடியுமா? நான்கரை ஆண்டு காலம் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம், ஆனால், வயிற்றெரிச்சலால் வசைபாடக்கூடாது, அதை மக்கள் வரவேற்க மாட்டார்கள்.

தன்னுடைய 50 ஆண்டுகால உழைப்பால், மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கிற எடப்பாடி பழனிசாமி, வளர்ச்சித் திட்டங்களால் வளர்பிறையாக தமிழகத்திற்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்களை தோல்வி தோல்வி என்று ஒப்பாரி வைத்திருக்கிறார்.

தோல்வி பற்றி திமுக பேசலாமா? 1991 சட்டமன்றத் தேர்தலில் ஒரே தொகுதியில் வெற்றி பெற்று அதை ராஜினாமா செய்தீர்கள்? 2011 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் மூன்றாவது இடம் கிடைத்தது, அதே போன்று 2011 உள்ளாட்சித் தேர்தல் அடைந்த தோல்வியை, 2012 சங்கரன்கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதையும், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைக்காது என்பதால் புறக்கணித்ததையும் மறந்து விட்டாரா?

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றி பெற முடியாமல் போனது. 2015 ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தோல்வி, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மூன்றாவது இடம் வந்தீர்களே?

இன்றைக்கு உங்கள் ஆட்சிதான் ஐ.சி.யூ வென்டிலேட்டரில் உள்ளது. அதிமுக வெற்றியை கேள்விக்குறி என்று சொல்லிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை அதற்கெல்லாம் நீ சரிப்பட மாட்டாய் என்று வசை பாடி இருக்கிற நீங்கள் எதற்குமே சரிப்பட மாட்டீர்கள்.

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தை சுந்தரா டிராவல்ஸ் என்ற கேலி பேசி இருக்கிறீர்களே, இது சுந்தரா டிராவல்ஸ் அல்ல, மக்களின் நம்பிக்கை டிராவல்ஸ், உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகிற டிராவல்ஸ்சை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்த ஸ்டாலின் அரசுக்கு பாய் பாய் சொல்லும் மக்கள், 234 தொகுதிகளிலும் வெல்கம், வெல்கம் என்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வருகிறார்கள்

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணம் வெற்றிவாகை சூடிட, இந்த வயிற்றெரிச்சல் ஸ்டாலினுடைய வாய்ச்சொல்லுக்கு முடிவுரை எழுதிட, எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *