• July 18, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இன்று எங்கள் திருமணநாள் என் மகன் விஷ்ணு அசிம் எங்கள் திருமண போட்டோ ஆல்பம் பார்த்து “அப்பா ஏன் நீ இரண்டு முறை கல்யாணம் பண்ணிக்கிட்டே? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான்…

அன்று 2015 மே 11, ராயப்பேட்டை வங்கியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தெரியாமல் தவறாக கட்டணம் கழிக்கப்பட்டதற்காக சத்தம்போட்டு தன் வாடிக்கையாளர் உறவு மேலாளரை அழைத்து சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அன்று தான் நான் என் ஆசை உயிர்… நஸீராவை முதல் முறையாக பார்த்தேன்… விழுந்துவிட்டேன்… ஆம் நான் தான் அந்த வாடிக்கையாளர் உறவு மேலாளர் வீரா. மோதலில் தொடங்கி, நட்பாக இணைந்து, காதலாக மலர்ந்தது எங்கள் உறவு.

நஸீரா சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள், நான் திருத்தணி அருகில் இருக்கும் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி விவசாயி மகன், அப்பா இறந்துவிட்டார் அம்மா மல்லிகா மட்டும் தான். நஸீராவின் குடும்பம் என்னையும், எங்கள் காதலையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் எனக்கு பயமாக இருந்தது, ஆனால் நஸீரா எங்கள் காதலில் உறுதியாக இருந்தாள்.

நஸீராவுக்கு தானே படித்து சம்பாதித்து சுயமாக வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருப்பவள். என் அம்மாவிற்கு நஸீராவை மிகவும் பிடித்துவிட்டது, எல்லாம் உன் விருப்பம் கண்ணு… நீ நல்லாயிருந்தா போதும் என்று சொல்லிவிட்டார்.

தன் தந்தை தனக்கு நிக்காஹ் செய்துவைக்க மாப்பிள்ளை பார்ப்பதை தெரிந்துகொண்ட நஸீரா, தன் குடும்பத்திடம் என்னை மட்டும் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

நாங்கள் இருவரும் 2017 ஜூன் 01, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம், என் அம்மாவின் ஆசைப்படி இந்து முறையில் திருமண நடத்த நஸீராவே திருத்தணி கோவில் அருகில் மண்டபம் பார்த்து ஏற்பாடுகளை செய்தாள்.

நஸீராவுக்காக நான் என் நண்பன் இம்ரான் உதவியோடு முஸ்லீம் முறைப்படி நிக்காஹ் ஏற்பாடுகளை செய்து நஸீராவின் குடும்பத்தையும் நிக்காஹ்வில் கலந்துகொண்டு வாழ்த்த அழைத்தேன். நஸீராவின் அப்பா இது அவள் எடுத்த முடிவு எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார், இருந்தாலும் எங்கள் நிக்காஹ்விற்கு நிச்சயம் வந்து வாழ்த்துவார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தேன்.

2017 மே 31, திருமண வரவேற்பு நடத்தினோம் எங்கள் இருவரின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் கலந்துகொண்டார்கள். வரவேற்பிற்காக நாங்கள் இருவரும் மேடை ஏறியதும் முதலில் வந்தது காவல்துறை தான்.  நான் நஸீராவை கடத்தி வந்துவிட்டதாக நஸீராவின் தந்தை தந்த புகாரில் என்னை கைது செய்ய வந்தார்கள். 

நஸீரா எனக்கு துணையாக இருந்தாள், என்னை காதலிப்பதாகவும், தன் விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடக்கிறது என்றும் உறுதியாக எழுதித்தந்தாள். நண்பர்கள் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள் பிறகு காவல்துறை வாழ்த்திவிட்டு சென்றது. 

எனக்கு பதட்டமாகவே இருந்தது, எப்போ என்ன நடக்கும் என்று தெரியாமல் பயம்கலந்த பதட்டத்திலே இருந்தேன் நஸீரா உறுதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாள்.

அடுத்த நாள் 2017 ஜூன் 01 முதலில் இந்து முறைப்படி எங்கள் திருமணம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. நஸீராவின் அண்ணனும் தம்பியும் தன் நண்பர்களை அழைத்து வந்து இந்த திருமணம் நடக்கக்கூடாது நஸீராவை நாங்கள் அழைத்து செல்வோம் என்று கலாட்டா செய்தார்கள். ஒரு கட்டத்தில் நஸீராவின் அண்ணனும் தம்பியும் என்னை அடித்திவிட்டார்கள், என் அம்மா பயந்துவிட்டார், நஸீராவின் அண்ணன் காலில்விழுந்து என்னை விட்டுவிடும்படி மன்றாடினார் என் அம்மா. 

நஸீராவிற்கு வந்தது கோவம், அண்ணன் கன்னத்தில் பளார் விட்டு வெளியே போ… என்று சத்தம்போட அங்கு இருந்தவர்களும் அவர்களை விரட்டினார்கள். நஸீராவின் அண்ணனும் தம்பியும் என்னை கொலை வெறியோடு முறைத்துக்கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது ஏன் என்றால் அன்னைக்கு விழுந்த அடி அப்படி… என்னா அடி.

நஸீரா என் அருகில் வந்து வலிக்குதா வீரா? என்று கேட்டாள். உள் காயங்களை மறைத்துக்கொண்டு பரவாயில்லை என்று தலையை ஆட்டினேன். மச்சானிடம் வாங்கிய அடியின் வலியோடு நஸீராவின் கழுத்தில் தாலி காட்டியது உலகப்போரை  வென்றதுபோல் மகிழ்ச்சியாக  இருந்தது.

கல்யாண சடங்குகள் முடிந்ததும் அடுத்து நஸீராவிற்காக நான் ஏற்பாடு செய்திருந்த நிக்காஹ்விற்க்கு தயாரானோம். இம்ரான் உதவியோடு நண்பர்கள் முன்னிலையில் முஸ்லீம் முறைப்படி நிகாஹ்ணாமவில் கையெழுத்திட நாங்கள் தயாரானோம் அப்பொழுது நஸீராவின் தாயார் உறவினர்களோடு கோவமாக உள்ளே வந்து எங்களை பார்த்து முறைத்துக்கொண்டு நின்றார்கள். 

எனக்கு அடுத்து என்ன பிரச்சனை செய்யப்போகிறார்களோ என்று பதட்டமாக இருந்தது. என் அம்மா அவர்களை உட்கார சொன்னதும் எதுவும் சொல்லாமல் எங்களை முறைத்துக்கொண்டே அமைதியாக முன் வரிசையில் அமர்ந்தார்கள்.

நிக்காஹ் நல்லபடியாக முடிந்ததும் கையில் வைத்திருந்த பையை எங்கள் கையில் கொடுக்காமல் தரையில் வைத்துவிட்டு “நிக்காஹ் முபாரக்” சொல்லிவிட்டு புறப்பட என் அம்மா நஸீரா அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டு போக சொல்ல எதுவும் சொல்லாமல் கண்களை துடைத்துக்கொண்டே புறப்பட்டுவிட்டார்கள். என்ன இருந்தாலும் பெற்ற தாய் தானே. 

என் நஸீராவின் முகத்தை பார்த்தேன்… எத்தனை பிரச்சனை இருந்தாலும் தன் அம்மா வந்து சென்றது நஸீராவிற்கு மகிழ்ச்சி… கண்களில் நீர் ததும்ப ஆனந்தமாய் சிரித்தாள்…  எனக்காக உறுதியாக நின்ற என் நஸீராவை வாழ்க்கை முழுவதும் இதே சிரிப்போடு மகிழ்ச்சியாக  பார்த்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்தேன். இன்று வரை அதே சிரிப்போடு மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறேன் என் தேன்சுடர் நஸீராவை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *