
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. அதற்குள் கட்சிகள் மக்களின் வீடு தேடிச் சென்று பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டன. பாயின்ட் பை பாயின்ட் பிரசாரம், ரோடு ஷோ என அதகளப்படுத்தத் தொடங்கிவிட்டன. இவற்றின் உச்சக்கட்டமாக அடுத்தடுத்து பிரமாண்டமான மாநாடுகளை நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றன. குறிப்பாக, வருகிற ஆகஸ்ட், செப்டம்பரில் அடுத்தடுத்து நிறைய முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகள் நடைபெறவிருக்கிறது.
ஆகஸ்ட் 10 : பாமக மகளிரணி மாநாடு
தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் இன்னும் தீராத நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் பாமகவின் மகளிரணி மாநாடு நடக்கவிருக்கிறது. தந்தை மகனுக்கிடையே நீர் பூத்த நெருப்பாக இருந்த மோதல் கடந்த ஆண்டு நடந்த கட்சியில் பொதுக்குழுவில்தான் வெளிப்படையாக வெடித்தது. மேடையிலேயே மைக்கை வீசிவிட்டு ராமதாஸூக்கு எதிராக அன்புமணி பேசியிருந்தார். அதன்பிறகு, மகாபலிபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டின் போது இந்த மோதல் வீதிக்கு வந்தது.
`ஒழுங்கா இருக்கணும் இல்லன்னா கடல்ல தூக்கிப் போட்டுடுவேன்’ என யாருக்கோ செய்தி சொல்வதைப் போல அன்புமணியை நெருக்கடிக்குள்ளாக்கினார் ராமதாஸ். இந்த மாநாட்டுக்கு பிறகுதான் மோதல் முற்றி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பத்திரிகையாளர்களை சந்தித்து அன்புமணியின் இமேஜை டேமேஜ் ஆக்கி வருகிறார் ராமதாஸ்.
உச்சக்கட்டமாக என்னுடைய பெயரைக் கூட அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனும் அளவுக்கு ஆவேசமடைந்துவிட்டார். இருவரையும் சமாதானம் செய்யும் வேலையில் பலதரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

`மகளிரணி மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வரலாம் அல்லது வராமலும் போகலாம்’ என ‘க்’ வைத்துப் பேசியுள்ளார் ராமதாஸ். தேர்தலுக்கு 6-7 மாதங்களுக்கு முன்பாக நடக்கும் மாநாடு என்பதால் அனைத்துத் தரப்பும் ஒன்றாக நின்று கட்சியின் பலத்தைக் காட்டும் வகையில் மாநாட்டை நடத்த வேண்டும். அப்போதுதான் முன்பைப் போல அத்தனைப் பெரிய கட்சிகளும் கூட்டணிக்காக நம்மை தேடி வருவார்கள் என்பதுதான் பாமக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.
சித்திரை முழுநிலவில் பிரிந்த தந்தை மகன் கூட்டணி பூம்புகாரில் இணையுமா என்பதுதான் அந்த மாநாட்டின் மையக் கேள்வியாக இருக்கிறது.
ஆகஸ்ட் 25 : தவெக இரண்டாவது மாநில மாநாடு!
விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்திய விஜய், மதுரையில் இரண்டாவது மாநாட்டை நடத்தத் தேதி குறித்திருக்கிறார். ஆகஸ்ட் 25 ஆம் தேதி மாநாட்டை முடித்துவிட்டு செப்டம்பரிலிருந்து பிரசார வாகனத்தில் வேகமெடுத்து டூர் செல்லவிருக்கிறார்.
விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர், தவெக தலைமையில்தான் கூட்டணி என செயற்குழுவில் தீர்மானமாகவே அறிவித்துவிட்டார்கள்.
மாநாடு குறித்து விஜய் வெளியிட்டிருக்கும் பதிவிலும் தவெகவை ‘முதன்மை சக்தி!’ என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆக, பெரிய கட்சிகள் எதனோடும் கூட்டணி வைக்காமல் தவெக தலைமையில்தான் கூட்டணி எனும் மனநிலையில் இருக்கின்றனர். ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டிலேயே கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்றெல்லாம் விஜய் அறிவித்தார். அந்த நகர்வை ‘Political Bomb’ என அவரே சுய வர்ணிப்பும் செய்திருந்தார். ஆனால், இந்த இடைப்பட்டக் காலத்தில் எந்தக் கட்சியும் தவெகவை சீண்டவில்லை.
அதேமாதிரி, விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்துவிட்ட பிறகும் பா.ஜ.கவும் அதிமுகவும் விஜய்க்கு அழைப்பு விடுவதை இன்னும் நிறுத்தவில்லை. தவெகவும் அதிமுகவை இன்னும் விமர்சிக்கவே இல்லை. ஆக, தவெக தலைமையில்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறார்களா அல்லது தனித்துப் போட்டி என்பதை டிமாண்ட் ஏற்றுவதற்கான ஒரு வழியாக முயற்சிக்கிறார்களா என்பதில் இன்னமுமே குழப்பம் நீடிக்கிறது.

இந்த விஷயத்தில் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டிய தேவை விஜய்க்கு இருக்கிறது. மேலும், சுற்றுப்பயணத்துக்கு முன்பாக தமிழகம் முழுவதும் பேசுபொருளாக ஆகும் வகையில் அரசியல் பரபரப்பை உண்டாக்க வேண்டும் என்றுதான் மாநாட்டை திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கேற்ற வகையில் விஜய்யும் அரசியல் செறிவுமிக்க உரையை அங்கே ஆற்றி ஆக வேண்டும். தவறினால், எந்தத் தாக்கமும் இல்லாமல் அன்றைய ட்ரெண்டிங்காக மட்டுமே மாறி பிசுபிசுத்தே போகும்.
செப்டம்பர் 4 : ஓ.பி.எஸ் மாநாடு!
திக்குத்திசை தெரியாமல் நிற்கிறார் ஓ.பி.எஸ். எடப்பாடியுடம் கைகோர்த்தவுடன் ஓ.பி.எஸூக்கு கிடைத்து வந்த டெல்லியின் அருளும் முற்றிலுமாக நின்றுவிட்டது. தமிழகம் வந்த அமித் ஷாவை பார்க்க நேரம் கொடுக்கப்படவில்லை. இந்து முன்னணியின் முருகர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. டெல்லி கண்டுகொள்ளாததால் கலக்கத்தில் இருக்கும் ஓ.பி.எஸ், சில நாட்களுக்கு முன்பு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். ஆலோசனைக்குப் பிறகு, ஒரு முக்கியமான முடிவை எடுத்துவிட்டேன். ஆனால், அதை செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரை மாநாட்டில்தான் அறிவிப்பேன் என ஓ.பி.எஸ் கூறினார்.

கட்சியில் மீண்டும் இணைய எந்த நிபந்தனையும் இல்லை என ஓ.பி.எஸ் கூறிவிட்டாலும், ஓ.பி.எஸ் யை உள்ளே சேர்க்க எடப்பாடிக்கு மனமில்லை. டெல்லியும் கையை உதறிவிட்டது. எந்தப் பக்கமும் க்ரீன் சிக்னல் கிடைக்காததால் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் முடிவில் ஓ.பி.எஸ் இருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியைத்தான் ஓ.பி.எஸ் மதுரையில் அறிவிக்கக்கூடுமாம். கட்சி ஆரம்பிப்பதற்கு விஜய் பக்கமாக துண்டை போட்டு வைத்திருக்கிறார். அதே ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ‘விஜய்க்கு எங்களுடைய தார்மீக ஆதரவு எப்போதும் உண்டு.’ என வாண்டடாக வண்டியில் ஏறினார். ஆக, ஓ.பி.எஸ் என்ன முடிவை எடுக்கப் போகிறார்? யார் பக்கம் சாயப்போகிறார் என்பதும் செப்டம்பர் 4 இல் தெரியவரும்.
செப்டம்பர் : திமுக முப்பெரும் விழா!
செப்டம்பரில் திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்படும். கடந்த ஆண்டு முப்பெரும் விழா மற்றும் பவளவிழா பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் திமுக மேடையேற்றியிருந்தது. ‘எங்களின் வெற்றியில் உங்களின் பங்கும் இருக்கிறது. எல்லாரும் சேர்ந்துதான் வென்றோம்.’ என்கிற தொனியில் கூட்டணி கட்சிகளுக்கு க்ரெடிட் கொடுத்துப் பேசி கூட்டணி வலுவாக இருப்பதை ஸ்டாலின் உறுதி செய்திருந்தார். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. தேர்தலை முன்வைத்து ஒவ்வொரு கூட்டணி கட்சியும் ஒவ்வொரு பக்கம் இழுக்க தொடங்கிவிட்டன.

காமராஜர் சர்ச்சையில் காங்கிரஸூக்கும் கொதித்தெழுந்திருக்கிறது. மதிமுகவை குறிவைத்து பாஜக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. பெ.சண்முகம் ஆட்சியின் மீது விமர்சனங்களுக்கு மேல் விமர்சனமாக வைக்கிறார். திருமா அவ்வபோது சீறிவிடுகிறார். எல்லோருடைய நோக்கமும் 2026 தேர்தலில் கடந்தத் தேர்தலை விட இந்தக் கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில், திமுகவின் முப்பெரும் விழா நடக்கவிருக்கிறது. கூட்டணி கட்சித் தலைவர்களை ஏற்றும் வகையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுமா? எனில், கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் என்ன மெசேஜ் சொல்லப் போகிறார்? கூட்டணி கட்சிகள் ஸ்டாலினுக்கு என்ன மெசேஜை கடத்தப் போகின்றன என்பதுதான் இதன் சுவாரஸ்யமான பகுதியாக இருக்கும்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய பிரமாண்டமான மாநாடுகளை மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற முக்கிய மண்டலங்களில் நடத்த வாய்ப்பிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகளுமே வெளியாகும். இப்போதுதாப் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இன்னும் சில மாதங்களில் அரசியல் அனல் தகிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.