
கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் காலி ஜனார்த்தன் ரெட்டியின் மகன் கிரீட்டி ரெட்டி. இவர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகும் படம் ஜூனியர். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா தேஷ்முக் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.
ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது நடிகை ஜெனியா குறித்து பேசிய இயக்குநர் ராஜமௌலி, “ஜெனிலியா தேஷ்முக் தெலுங்கு சினிமாவுக்கு மீண்டும் வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஜெனிலியா காலத்தால் உறைந்து அப்படியே இருக்கிறாய். எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டபிறகும், அப்போது பார்த்த மாதிரியே இருக்கிறாய்.
இந்தப் படத்தில் ஒரு புதிய ஜெனிலியாவைப் பார்ப்போமா என்று ஒளிப்பதிவாளர் செந்திலிடம் கேட்டேன். அவர் நிச்சயம் என உறுதியளித்தார். நான் அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார். இந்தப் பாராட்டு குறித்து நடிகை ஜெனிலியா தன் எக்ஸ் பக்கத்தில் ராஜமௌலியை குறிப்பிட்டு, “நீங்கள் மிகவும் அன்பானவர். உங்கள் வார்த்தைகள் எனக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.