
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
‘சாலை ஈரமாக இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவர் வேகமாகச் சென்றிருக்கக்கூடாது.’
‘ஒரு வகையில் பாறையில் சென்று மோதியது பரவாயில்லை. மறுபக்கம் பள்ளத்தில் விழுந்திருந்தால் என்னாவது?’
‘சிபிஆர் மாதிரியான ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மலைப் பயணங்களுக்கு ஒத்துவராது. இமாலயன்தான் இதற்கெல்லாம் சரி. ’
ஒவ்வொருவரும் அந்தக் கணத்தில் மனத்தில் பட்டதைப் பேசிக் கொண்டிருந்தோம். அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்குவதற்குச் சிறிது நேரம் பிடித்தது.
அன்று மதியம் எப்போதும் போல மேகி நூடுல்ஸ் உணவாக வாய்க்கப் பெற்றது. இன்னும் குழுவினரிடம் காலை சம்பவத்தின் தாக்கம் இருந்தது. அதைப் பற்றிய பேச்சுகளும்தான். கேப்டன் அடிபட்டவருடன் இருக்கவேண்டும் என்பதால் எங்களுடன் பார்த் வந்தார். அவர்தான் இன்று மாலை வரை அணியை வழிநடத்திச்செல்லப்போகிறார். அவர் எங்களை அழைத்துப் பேசினார்.
‘இன்று சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நான் உங்கள் அனைவருக்கும் வரிசை எண்களைத் தரப்போகிறேன். அதன் படிதான் நீங்கள் வர வேண்டும். மிக நிச்சயமாக யாரும் யாரையும் முந்தி செல்லக்கூடாது ’.
கொடுக்கப்பட்ட எண் வரிசையின்படி நாங்கள் வண்டியைச் செலுத்தத் தொடங்கினோம். அன்றைய தினத்தைப்போல எப்போதும் சீராகவும் ஒழுங்குடனும் எங்கள் அணி வாகனங்களைச் செலுத்தியதே இல்லை. அத்தனை சுமுகமாக அமைந்தது அந்தப் பயணம்.
இன்னர் லைன் பெர்மிட். இது இந்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்குப் பயணிக்கும்போது பெறப்படும் அனுமதி. இதனைப் பயணிகளின் அடையாள அட்டையைச் சரிபார்த்துவிட்டு வழங்குவார்கள். கட்டணம் உண்டு.
லே பகுதியின் துணை ஆணையர் அலுவலகத்தின் மூலம் இந்த அனுமதிகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டினருக்கு இந்த அனுமதியை பிரொடெக்டட் ஏரியா பெர்மிட் என்ற பெயரில் கொடுக்கிறார்கள்.
நாங்கள் பயணம் செய்ததில் இன்னர் லைன் பெர்மிட் தேவைப்பட்ட இடங்கள் கார்துங் லா, பாங்கொங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, ட்ஸோ மோரோரி, ஷியோக் பகுதிகள். இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, மியான்மார், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து அனுமதி வழங்கப்படுவதில்லை.
மாறாக இவர்கள் டெல்லியில் இருக்கும் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வழியாகப் பதிவுசெய்து அனுமதியைப் பெறவேண்டும். எங்கள் பயணக்குழுவே இந்த அனுமதி பெறும் பொறுப்புகளை ஏற்றிருந்ததால் எங்களுக்குக் கூடுதல் வேலை இல்லாமல் போனது.

கார்துங் லாவில் இருந்து நுப்ரா பள்ளத்தாக்கை அடைவதற்கு மாலையாகிவிடும் போலத்தெரிந்தது. பயணத்தூரம் என்னவோ நூற்றியிருபது சொச்சம் கிலோமீட்டர்கள்தான். ஆனால் பாதிக்கும் மேல் மலைப்பாதையாக இருக்கப்போகிறது என்றார்கள்.
இந்தியா, சீனா, மத்திய ஆசியாவை இணைத்த அன்றைய பட்டுநூல் வர்த்தக வழித்தடங்களில் ஹுண்டர் தவிர்க்க முடியாத மையமாக இருந்தது. வர்த்தகர்கள், பயணிகள், யாத்ரீகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கூடினர்.
ஹுண்டர் பண்டைய லடாக் அரசின் ஒரு பகுதியாக இருந்தது. திபெத்திய, மங்கோலிய, காஷ்மீரி, டோக்ரா வம்சங்கள், பேரரசுகள் ஹூண்டரை ஆட்சி செய்திருக்கின்றன. வரலாற்றுச் சாட்சியாக இப்போது இரட்டை திமில்கொண்ட பாக்ட்ரியன் வகை ஓட்டங்கள் மட்டுமே அங்கே எஞ்சியிருக்கின்றன.
அந்த ஒட்டகங்களே அதன் உரிமையாளர்களின் வாழ்வாதாரம். சோர்ந்துபோயிருந்த அவற்றின் மீது சவாரி செய்ய மனமில்லாமல் அங்கிருந்த மணற்பரப்பில் அமர்ந்திருந்தோம். சாம்பல் நிற மணல் பரப்பின் நடுவே சிறிய ஓடையைப்போல ஷ்யோக் நதி ஓடிக்கொண்டிருந்தது.
பாலைவன மணலைவிட மிக சிறிய துகள்களாக, மிருதுவானதாக இருந்தது அந்நிலப்பரப்பு. இத்தனை அடி உயரத்தில் ஒரு பாலைநிலம்.

கார்துங் லாவைபோல நுப்ரா பள்ளத்தாக்கிலும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்தனர். அங்கே குழுவாக வந்திருந்த தமிழர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர்.
டெம்போ டிராவலர் வேனில் பதினைந்து பேர்கொண்ட குழு லடாக், நுப்ரா, பாங்காங் ஏரி இடங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். பயணம், உணவு, தங்குமிட வசதிகள் குறித்து அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என்று அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.
இருள் சூழ்வதற்கு ஒரு மணிக்கும் குறைவான நேரம் இருக்கும்போது, சஷாங் அங்கு வந்துசேர்ந்தார். அவரைக் கண்டதும் நாங்கள் கேட்ட முதல் கேள்வி, சித்தார்த்துக்கு எப்படி இருக்கிறது என்பதுதான்.
கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். அதைத் தாண்டி கவலை கொள்வதற்கு வேறொன்றுமில்லை, நீங்கள் இது எதுவும் உங்கள் பயணத்தைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார்.
அதன்பிறகு நாங்கள் இருவரும் அங்கிருந்த முக்கால் மணி நேரம் சுமாருக்கு அவருடன்தான் பேசிக்கொண்டிருந்தோம். அன்று பயணம் சார்ந்து தொடங்கிய எங்களது பேச்சு, சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை எனப் பல்வேறு தலைப்புகளைத் தொட்டது. அவர் மற்றவர்களிடம் பேசுவதையும் நான் கவனித்துள்ளேன். ஒவ்வொருவரிடமும் சுவாரசியமாக ஏதேனும் இருக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு. அந்தக் கதைகளைப் பக்குவமாகப் பேசி உருவி வைத்துக்கொள்வது அவரது தனிச் சிறப்பு.
அங்கிருந்து இருபது நிமிடத் தொலைவில்தான், நாங்கள் அன்று தங்கவிருந்த இடம் இருந்தது. சமதளத்தில் ஒரு தார்ச்சாலை. சுற்றிலும் பலஅடி தூரத்திற்கு வெட்டவெளி. கிட்டத்தட்ட பிரம்மாண்ட மைதானம் போலிருந்தது அப்பகுதி.
அதற்குப் பின்னால் பழுப்பு நிற மலைத் தொடர்கள், பல நூறு ஆண்டு காலங்களாகக் காற்றும், மழைநீரும் அடித்து, அரித்து, வினோத கூர்வடிவங்களில் இருந்தன அந்தச் சிகரங்கள்.
அப்பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தோம். தனியாக வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவர்கள், நின்றவாறே பைக்கை ஓட்டிக் கொண்டு போக, அதைப் பார்த்து நவீனும் அதேபோல செய்ய வேண்டும் என்றார்.

‘நீ ரெண்டு பேரையும் கீழே தள்ளப்போற, வேண்டாம்’ என்றேன்.
சரி என்றவர், அடுத்த சில நொடிகளில் ‘நல்ல பேலன்ஸ் இருக்கு, லெட்ஸ் ட்ரை’ என்றார்.
இந்த முறை எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளவே ஓகே. பி கேர்ஃபுல் என ஒப்புதல் தந்தேன்..
சர்வச் சிரத்தையுடன், மித வேகத்தில், நவீன் எழுந்து நின்று பைக்கை செலுத்தினார். எனக்கு அந்தச் சமயத்தில் எங்கே பிடித்துக்கொள்வது என்று புரியவில்லை. நிச்சயம் நவீனை பிடிக்க இயலாது. ஒரு வேளை பழக்கதோஷத்தில் பிடிக்க முயன்றிருந்தால், மறுநொடி நிச்சயம் இருவரும் தரையில் கிடந்திருப்போம். இரு கைகளாலும் பைக்கின் பின்பக்கக் கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கால்களால் இயன்றவரை பைக்கை ‘பேலன்ஸ்’ செய்யப்பார்த்தேன்.
நவீன் நின்றுகொண்டு ‘ஒஒஹ்ஓஹோ’ வென உற்சாகக்கூச்சல் எழுப்பிக்கொண்டே சிறிது தூரம் சென்று பின் அமர்ந்தவாறு வண்டியைச் செலுத்தத்தொடங்கினார்.
‘இப்போ சந்தோஷமா’ என நான் கேட்க, இருந்த பத்தற்றதைத் தாண்டி நாங்கள் இருவருமே சிரித்துவிட்டோம். அப்பகுதியில் பலமாக வீசிக்கொண்டிருந்த காற்றின் விசை அப்போது இன்னும் தீவிரமடைந்தது. சற்று தொலைவில் மணல் சுழல் உருவாவதைக் கண்டோம். அது மேலே சுழன்று எங்களை நோக்கி நகர்ந்தது. சந்தேகமேயில்லாமல் நாங்கள் மணல் புயலில் சிக்கவிருக்கிறோம் எனத் தெரிந்துவிட்டது.
இப்போது குழப்பம் வண்டியை நிறுத்துவதா மேற்கொண்டு ஓட்டுவதா என்பதுதான். முன் செல்கிறவர்கள் என்னவானார்கள் எனப் பார்ப்பதற்குள் அந்தச் சுழலுக்குள் நாங்கள் இருந்தோம்.

கண்களை முழுதாகத் திறக்கமுடியாத அளவிற்குப் புழுதி கிளம்பியது. காற்றின் விசை பைக்கை தாக்க, அது சாயாமல் சமாளித்து, அதே சமயம் வேகம் குறையாமல் முன்னோக்கியும் செலுத்தவேண்டியது இருந்தது.
வண்டியை நிறுந்தியிருந்தால் என்வனாகியிருக்கும் என்றெல்லாம் எங்களுக்கு யோசிக்க நேரமிருக்கவில்லை. மணல் புயலைக் கடந்தும் நாங்கள் யாரும் வண்டியை நிறுத்தாமல் அந்தப் பகுதியைக் கடந்தோம்.
நுப்ரா பள்ளத்தாக்கின் கிராமங்கள் தென்பட்டதும்தான் நிம்மதியானது. அப்பகுதி முழுவதுமே சிறியதும் பெரியதுமாகத் தங்கும் விடுதிகள் இருந்தன. தோட்டங்கள் சூழ வீடுகள் அமைந்திருந்தன. ஒவ்வொரு விடுதியைத் தாண்டும் போதும், நாம் எங்குத் தங்கப் போகிறோம் என்ற ஆவல் அதிகமாகிக்கொண்டேபோனது. அந்த எதிர்பார்ப்புகள் அத்தனையையும் விஞ்சியது நாங்கள் அன்று தங்கிய இடம்.
நுழைவாயிலில் ஆப்பிள் மரங்கள், அங்கே எங்கள் பைக்குகளை நிறுத்திவிட்டு, சில அடிதூரம் உள்ளே சென்றதும் அங்கே ஆங்காங்கே கூடாரங்கள் தெரிந்தன. அதற்கு இடையில் சூரியகாந்தி மலர்கள் நிறைந்திருந்தன.
சூரியனைப் பார்த்ததும் அந்தப் பூவில் தோன்றும் பிரகாசத்துக்கு ஈடாக எங்கள் கண்கள் நிறைந்திருந்தன. மனத்திலும் உற்சாகம் ஊற்றெடுத்தது. சூரியகாந்தி மலர்களை இமைக்காமல் பார்த்து நின்றிருந்தோம். அந்த இடத்தில் இப்படி ஒரு தோட்டத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

இத்தனைக்கும் அன்று அதிகத் தொலைவு கடந்து வந்திருந்தோம். கழுத்து வலி, இடுப்பு வலி போகக் காலை ஏற்பட்ட விபத்தும் எங்களை மனத்தளவில் சோர்வடையச் செய்திருந்தது. ஒரே நொடியில் அனைத்தும் மறந்து, நான் அங்கே துள்ளித் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதே கிட்டத்தட்ட வெளிச்சம் குறையத் தொடங்கியிருந்தது.

இப்படிப்பட்ட ஓரிடத்திற்கு இத்தனை தாமதமாகவா அழைத்துவருவது என ப்ரீதியும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அங்கே சென்று சேர்ந்ததிலிருந்தே நவீனுக்கு உடல் சோர்வு அதிகமிருந்தது. இரவு இன்னும் மோசமாகலாம், உணவு உண்டதும் மாத்திரை தேவைப்படும் என்பதைக் கணித்திருந்தோம். அவ்வெண்ணம் சரியாகிப்போனது.
இதுவரை தங்கிய இடங்களில் இருந்ததை போலக் கடும் பனி, மழைக்காற்று இல்லையென்றாலும், நவீனுக்கு குளிர் அதிகமாக உறைத்தது.. அடுத்த நாள் பயணத்துக்குத் தயாராவதற்கு நல்ல ஓய்வு தேவையென்பதால், அன்றைய இரவு கேம்ப்ஃபயருக்கு நவீன் வரவில்லை. சிறிது நேரம் கூடாரத்தில் அவருடன் இருந்துவிட்டு. நான் மட்டும் அணியினரின் சந்திப்புக்குச் சென்றேன்.
சண்டிகரிலிருந்து வந்திருந்த ஆயுஷ், கிட்டார் வசிக்கும் ஆர்வமுள்ளவர். அவரது ஊரில் நண்பர்களுடன் இசைக்குழுவை வைத்திருப்பதைப் பற்றியும் இசைக் கச்சேரி அனுபவங்களையும் அன்றுதான் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். உடனே அந்த விடுதி காப்பாளர், உள்ளே சென்று கிட்டார் ஒன்றை எடுத்துக்கொண்டு வர, சாஷாங் உற்சாகமானர்.
அதை வாங்கி ஆயுஷிடம் கொடுத்து, அவரை வாசிக்கச் சொல்லிவிட்டு, சில இந்திப் பாடல்களைப் பாடினார். அவருடன் இணைந்து விடுதி காப்பாளரும் பாட, மற்றவர்களும் சேர்ந்துகொண்டனர். நானும், கேரளாவைச் சேர்ந்த அருணும் பாடலை வரிகள் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதைக் கவனித்த சஷாங்க்,
‘அடுத்த பாடலை நீங்கள் பாடுங்கள். இன்றைக்கு அனைவரது மொழியிலும் பாடல்கள் அரங்கேற்றப்படும்’ என்றார்.

எந்தப் பாடலைச் சொல்வது என்று கேட்ட அருணிடம், ஒரு மலையாளப் பாடலைப் பாடச் சொல்லிவிட்டு, அதைக் கைப்பேசியில் ஒலிக்கச் செய்தனர். அதன் பிறகு தமிழ்ப் பாடல், தெலுங்கு, மீண்டும் இந்தி, ஆங்கிலம் என அங்குப் பிற மொழிப் பாடல்கள் சுற்று இரவு பதினொரு மணிவரை தொடர்ந்தது.
மலையுச்சி பாலைநிலம், சூரியகாந்தி தோட்டம், பேசிப் பேசி தீராத வரலாற்றுக் கதைகள் இவையனைத்தையும் தாண்டி இன்னும் ஒரு சிறப்புகூட ஹுண்டருக்கு உண்டு. பால்வெளியைக் காண்பதற்கும், நட்சதிரங்களை, கோள்களைப் பார்ப்பதற்கும் மிகச் சிறந்த இடம் நுப்ரா பள்ளத்தாக்கு. பத்தாயிரம் அடிக்கு மேலான உயரம், குறைந்த செயற்கை விளக்குகள் எனவே ஒளி மாசுபாடு அதிகமிருக்காது என்பதால் நட்சத்திரங்கள் இங்கே தெளிவாகத் தெரியும். பல நாட்டுப் புகைப்படக்காரர்கள் நீண்ட எக்ஸ்போஷர் கொண்ட புகைப்படங்களை எடுப்பதற்காக இங்கே வந்து முகாமிடுவார்கள்.
(தொடரும்)
– ராஜ்ஸ்ரீ செல்வராஜ்
rajshriselvaraj02@gmail.com
