
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜுலை 12ம் தேதி நடத்திய குரூப்-4 தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக சலசலப்புகள் எழுந்தன.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் 10ம் வகுப்பு வரைப் பயின்ற மாணவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்படுகிறது என் குற்றம்சாட்டியும், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த்.
10ம் வகுப்புக்கு பதில் ஆராய்ச்சித் தரத்தில் கேள்விகள்!
அவரது அறிக்கையில், “தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,395 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி – 4 தேர்வினை, கடந்த 12ஆம் தேதி நடத்தியது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எழுதினர். இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் தமிழ் மொழிப் பகுதிக்கான கேள்விகள் மிகக் கடினமாகக் கேட்கப்பட்டதாகத் தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தொகுதி – 4 தேர்விற்குப் பத்தாம் வகுப்புத் தரத்திலான வினாக்கள் மட்டுமே கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தது. காலம் காலமாக இந்த நிலைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கேட்கப்பட்டுள்ள தமிழ் வினாக்கள், அறிவிக்கையின் போது தெரிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தரத்திற்கு மேலான பட்டப் படிப்புத் தரத்திலும் ஆராய்ச்சித் தரத்திலும் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தரம் அளவில் தொகுதி – 4 தேர்விற்குத் தயாராகி இருந்த தேர்வர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் வழி மாணவர்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் நோக்கம்!

மேலும், “தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் நடத்தப்பட்ட குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி, தேர்வர்களுக்கு நீதி வழங்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கபட நாடகத் திமுக அரசானது தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் செயல்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆண்டு (2024) முதல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I, தொகுதி – II, தொகுதி – II A ஆகியவற்றுக்கான கொள்குறி வகைத் தேர்வுகளில், பொது ஆங்கிலத்திற்கான வினாத்தாளானது, குறிப்பிடப்பட்டுள்ள தரமான (Standard) பத்தாம் வகுப்புத் தரத்திலேயே தயார் செய்யப்பட்டு, தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பொதுத் தமிழுக்கான வினாத்தாளானது, அறிவிக்கையின் போது பத்தாம் வகுப்புத் தரம் என்று அறிவித்துவிட்டு, ஆராய்ச்சி நிலையில் (Research Standard) இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
கழகத் தலைவர் ஒப்புதலுடன்…
தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம…
— N Anand (@BussyAnand) July 17, 2025
மேலும், “இந்தச் செயல்பாடானது, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளிய மக்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையே அன்றி வேறென்ன?
தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க நினைக்கும் கபட நாடகத் திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தங்களுக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடினமாக உழைத்துப் படித்துத் தேர்வெழுதிய லட்சக்கணக்கான தேர்வர்களை ஏமாற்றி, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அதன் வாயிலாக லாபமடைய நினைக்கிறீர்களா? தமிழக வெற்றிக் கழகம் இதை ஒருபோதும் அனுமதிக்காது.
இனிவரும் காலத்தில், தமிழுக்கும் தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கும் உண்மையான முக்கியத்துவம் அளித்து, தேர்வுகள் நடத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் வலியுறுத்துகிறேன்.” என அறிக்கையில் கூறியுள்ளார்.