
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி, நாடாளுமன்றத்தில் அதன் பெரும்பான்மையை இழந்து வருகிறது. இந்த வாரத்தில் இரண்டாவது கட்சியாக தீவிர பாரம்பரிய கட்சியான ஷாஸ், நெதன்யாகுவின் கேபினட்டில் இருந்து அமைச்சர்களை திரும்பப் பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ‘ஐக்கிய தோரா யூத கட்சி (UTJ)’ பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியிலிருந்து நீங்கியது.
UTJ போலில்லாமல் ஷாஸ் கட்சி நெசெட்டில் (Knesset – ஒற்றைக் குழு நாடாளுமன்றம்) சில விவகாரங்களில் நெதன்யாகுவுக்கான ஆதரவை தொடர்கிறது.
தற்போது சர்ச்சைக்குள்ளதாகியிருக்கும் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை குறித்து முடிவெடுக்க அவகாசம் அளிப்பதாகக் கூறியுள்ளது.
ஷாஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மனம் நிறைவேற்றுதல், ஆட்சியை கலைப்பது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடாது என்றும், தேவைப்பட்டால் சில விவகாரங்களில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
ஆனாலும் இரண்டு கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியதால் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்தில் 120ல் 50 இடங்களுடன் பெரும்பான்மை இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஷாஸ் மற்றும் ஐக்கிய தோரா யூத கட்சி முறையே 11 மற்றும் 7 இடங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளன. இவை முழுமையாக எதிர்க்கட்சிகளாக மாறிவிடவில்லை என்பதால் பிரதமர் நெதன்யாகு உடனடியாக தேர்தலை சந்திக்க நிர்பந்திக்கப்படும் சூழல் எழாது. ஆனால் வரும் நாட்களில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கூறுகின்றனர்.
தற்போது கூட்டணியில் லிகுட், ரிலிஜியஸ் சயோனிஸ்ட் பார்ட்டி, மற்றும் ஓட்ஸ்மா யெகுதிட் ஆகிய கட்சிகள் நிலைத்திருக்கின்றன.
வரும் ஜூலை 27 முதல் 3 மாத நாடாளுமன்ற விடுமுறை தொடங்குவதனால் வெளியேறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நெதன்யாகுவுக்கு அவகாசம் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
தீவிர மரபுவழிக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவது ஏன்?
தீவிர மரபுவழி செமினரி மாணவர்களுக்கு கட்டாய ராணுவச் சேவையிலிருந்து விலக்கு அளிக்கும் விவகாரம் இஸ்ரேல் அரசியலில் நீண்டகாலம் நீடிக்கும் பிரச்னையாக இருந்து வருகிறது.
ஷாஸ் மற்றும் ஐக்கிய தோரா யூத கட்சி விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் உச்ச நீதிமன்றம் முழுமையான விலக்கு அளிப்பதற்கு எதிராக தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த நிலையில் நடாளுமன்றத்தில் தீவிர மரபுவழி செமினரி மாணவர்களுக்கு கட்டாய ராணுவச் சேவையிலிருந்து விலக்கு அளிக்கும் விதமாக ஆளும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்ற மசோதா தோல்வியடைந்ததால், தீவிர மரபுவழி கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.
தற்போது ஈரான் மற்றும் காசாவில் ராணுவ நடவடிக்கைகளுக்காக அதிக மனித வளம் தேவைப்படுவதனால் க்னெசெட் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு குழு தலைவரான யூலி எடெல்ஸ்டைன் (லிகுட்), ராணுவத்தின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத எந்த மசோதாவையும் முன்னோக்கி நகர்த்த மறுத்துவிட்டார்.
மறுபக்கம் ஷாஸ் உள்ளிட்ட கட்சிகள் மதத்தலைவர்களிடமிருந்து கடும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. போரைத் தவிர்த்து ஹமாஸுடன் உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தன. இது கூட்டணியிலிருக்கும் முரண்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஆனால் போர், ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, நெதன்யாகுவின் ஆட்சியைக் கலைத்து, தேர்தல் நடத்துவதற்கான சூழல் எழ சில மாதங்களுக்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற விடுமுறையும் அவருக்கு சாதகமானதாக இருக்கிறது. எனினும் அவரது தலைமையில் மிகவும் பலவீனமான காலகட்டத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.