
பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்ததடுத்து படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க பிரமுகர், தொழிலதிபர் என கொலைகள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பீகாரில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தற்போது நடந்து வரும் படுகொலைகள் நிதீஷ் குமார் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மேலும் ஒரு சம்பவமாக பாட்னா மருத்துவமனைக்குள் பட்டப்பகலில் நுழைந்த கும்பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிமினலை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. 12க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய சந்தன் மிஸ்ரா என்ற கிரிமினல் சிறையில் இருந்து பரோலில் வந்து பாட்னா பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.
இன்று காலையில் திடீரென 5 பேர் கொண்ட கும்பல் துமுதுமுவென மருத்துவமனைக்குள் நுழைந்தது. அவர்கள் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே வந்து சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெற்று வந்த அறைக்குச் சென்று சரமாரியாக சுட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் திரைப்படங்களில் வருவது போன்று வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கார்திகே சர்மா கூறுகையில், ”12-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் சிறையில் இருந்து பாகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டு இருந்தார்.
அவர் மருத்துவ காரணங்களுக்காக பரோலில் வந்து பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அவரை எதிர்க்கோஷ்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தன் ஷெரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கொலையில் மருத்துவமனை செக்யூரிட்டி கார்டுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றன. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ”மாநிலத்தில் யாராவது பாதுகாப்பாக இருக்கிறார்களா?. அரசு ஆதரவு பெற்ற கிரிமினல்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்த நோயாளியை சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது போன்று சம்பவம் 2005ம் ஆண்டுக்கு முன்பு நடந்ததா?” என்று கேள்வி எழுப்பினார். மாநில டிஜிபி வினய் குமார் இது குறித்து கூறுகையில், ”குற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டை ஒப்பிடுகையில் மாநிலத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
பீகாரில் ரௌடிகளின் ஆட்சி நடப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 17 நாள்களில் 46 படுகொலைகள் நடந்திருக்கிறது என்று அக்கட்சி கூறி இருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் பப்பு யாதவ் எம்.பி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் அவரை போலீஸார் உள்ளே விடவில்லை.