• July 17, 2025
  • NewsEditor
  • 0

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள மிகிங்கோ தீவு, உலகின் மிக சிறிய, நெரிசலான பகுதியாக அறியப்படுகிறது.

இந்த தீவு, கால்பந்து மைதானத்தின் பாதி அளவு கூட இல்லாத, வெறும் அரை ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உகாண்டா மற்றும் கென்யா எல்லையில் அமைந்துள்ள இந்த தீவு, சிறிய அளவு இருந்தபோதிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்விடமாக உள்ளது.

மிகிங்கோ தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவுக்கு அருகில் இருக்கும் நீரில் நைல் பெர்ச் (Nile perch) மீன்கள் அதிகமாக இருப்பதால், கென்ய மற்றும் உகாண்ட மீனவர்களுக்கு இது முக்கிய மீன்பிடி மையமாக உள்ளது.

தீவில் நான்கு மதுக்கடைகள், ஒரு மருந்தகம் மற்றும் ஒரு சிறிய கடை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பாறைகள் நிறைந்த இந்த தீவில் தாவரங்களும் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

எப்படி பயணம் செய்யலாம்?

மிகிங்கோ தீவை அவ்வளவு எளிதில் அடையமுடியாதாம். முதலில், கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு விமானத்தில் செல்ல வேண்டும்.

அங்கிருந்து, விக்டோரியா ஏரியின் கரையில் உள்ள கிசுமு நகரத்திற்கு ஆறு மணி நேர கார் பயணம் செய்ய வேண்டும், பின்னர், உள்ளூர் மோட்டார் படகில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து அந்த தீவை அடையலாம். இது சுற்றுலா பயணிகளுக்கு சற்று சவாலான அனுபவமாக இருக்கும்.

தீவை அடைந்தவுடன், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு காவலர்களை சந்தித்து, அணுகல் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த பகுதியில் கடற்கொள்ளை பிரச்சனை இருப்பதால் இவ்வாறு செய்ய வலுயுறுத்துகின்றனர்.

கென்யா-உகாண்டா எல்லை மோதல்

மிகிங்கோ தீவு, கென்யா மற்றும் உகாண்டா இடையே ஒரு எல்லைப் பிரச்சனையின் மையமாக உள்ளது. 1991-ல், கென்ய மீனவர்களான டால்மாஸ் டெம்போ மற்றும் ஜார்ஜ் கிபெபே இந்த தீவில் தாங்கள் தான் முதலில் குடியேறியவர்கள் எனக் கூறுகின்றனர்.

ஆனால், 2004-ல் உகாண்ட மீனவர் ஜோசப் நசுபுகா தீவுக்கு வந்தபோது, அங்கு கைவிடப்பட்ட வீடு மட்டுமே இருந்ததாகக் கூறுகிறார்.

2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், உகாண்ட கடல் காவல்துறை தீவில் கூடாரம் அமைத்து உகாண்டக் கொடிகளை ஏற்றியதாக கென்ய அரசு கூறியது. 2009 பிப்ரவரியில், மிகிங்கோவில் வசிக்கும் கென்யர்கள் உகாண்ட அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது, இது இரு நாடுகளுக்கு இடையே மோதலை உருவாக்கியது.

பின்னர், ஜூலை மாதத்தில், உகாண்ட அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது. மிகிங்கோ தீவு கென்யாவுக்கு சொந்தம் என்றும், ஆனால் அதன் அருகிலுள்ள நீர் பெரும்பாலும் உகாண்டாவுக்கு சொந்தம் என்றும் கூறியது. இதனால், உகாண்டக் கொடி இறக்கப்பட்டு, வாபஸ் பெறப்பட்டன.

MailOnline-ன் கூற்றுப்படி, நைல் பெர்ச் மீன்களின் விலை சமீப ஆண்டுகளில் 50% உயர்ந்து, சர்வதேச சந்தைகளில் ஒரு கிலோவிற்கு $300 (இந்திய ரூபாயில் 25,823)ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *