
சென்னை, அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இணையதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்.
அப்போது அயனாவரம், பாரதி நகரில் குடியிருக்கும் சிவகுமார் என்பவர் ரூ.15 லட்சத்துக்கு வீடு லீசுக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்திருப்பதை மணிகண்டன் பார்த்திருக்கிறார்.
பின்னர் சிவகுமாரை நேரில் சந்தித்து மணிகண்டன் வீடு கேட்டிருக்கிறார். அப்போது வீட்டில் வாடகைக்கு ஆள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சில மாதங்களில் காலி செய்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த வீட்டை உங்களுக்கு லீசுக்குக் கொடுக்கிறேன். அதற்கு முன்பு வீடு லீசுக்காக 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மணிகண்டனிடம் சிவகுமார் கூறியிருக்கிறார்.
அதற்குச் சம்மதித்த மணிகண்டன், சிவகுமார் கூறியது போல ஒப்பந்தம் போட்டு சிவகுமாரிடம் மணிகண்டன் பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வீட்டை லீசுக்கு மணிகண்டனிடம் சிவகுமார் கொடுக்கவில்லை.
அதனால் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு சிவகுமாரைச் சந்தித்து பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார். அதனால் சிவகுமார் பல்வேறு தவணைகளாக ரூ.4.5 லட்சத்தை மட்டும் திரும்பக் கொடுத்திருக்கிறார். மீதி பணம் ரூ.10.5 லட்சத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.
அதனால் சிவகுமாரைச் சந்தித்து மணிகண்டன் பணம் கேட்டபோது, பணத்தைத் தர முடியாது என மிரட்டியிருக்கிறார் சிவகுமார். இதையடுத்து கடந்த 14.07.2025-ம் தேதி அயனாவரம் குற்றப்பிரிவில் மணிகண்டன், வீட்டின் உரிமையாளர் சிவகுமார் மீது மோசடி புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸார் சிவகுமாரை விசாரணைக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணையில் சிவகுமார் பணம் வாங்கியது உண்மையெனத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சிவகுமார் செய்த மோசடி வேலையும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து அயனாவரம் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “சென்னை கிருகம்பாக்கத்தில் குடியிருக்கும் சிவகுமார் தனக்குச் சொந்தமான அயானவரம் வீட்டைத் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்திருக்கிறார். அதில் கிடைத்த பணத்தைத் தொழிலில் முதலீடு செய்த சிவகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் அடமானம் வைத்த வீட்டின் கடனைச் செலுத்த முடியாமல் சிவகுமார் சிரமப்பட்டிருக்கிறார். அதனால்தான் அந்த வீட்டை லீசுக்குக் கொடுக்க சிவகுமார் திட்டமிட்டு இணையதளத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். அதன்படி ஒருவருக்கு வீட்டை லீசுக்கு விட்டிருக்கிறார்.
அதன்பிறகு அதே விளம்பரத்தைப் பார்த்து மணிகண்டன் என்பவர் வீட்டை லீசுக்குக் கேட்டிருக்கிறார். அவரிடமும் பணத்தை வாங்கிய சிவகுமார், மணிகண்டனை ஏமாற்றி வந்திருக்கிறார். ஒரே வீட்டை இரண்டு பேரிடம் லீசுக்குக் கொடுப்பதாகக் கூறி, பணம் மோசடி செய்த சிவகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.